இலங்கை இம்முறை ஜெனிவாக் கூட்டத் தொடரில் சவாலை எதிர்கொள்ளப் போகின்றது..

இலங்கை இம்முறை ஜெனிவாக் கூட்டத் தொடரில் சவாலை எதிர்கொள்ளப் போகின்றது என்பது ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளரால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையிலிருந்து தெளிவாகின்றது. அரசு குறித்த அறிக்கையை ஆழமாக ஆராய்ந்து, உரியவாறான பிரதிபலிப்பை எதிர்வரும் ஜெனிவாக் கூட்டத் தொடரில் வெளிப்படுத்த வேண்டும்.”

– இவ்வாறு வலியுறுத்தினார் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க.

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையார் வெளியிட்டுள்ள காட்டமான அறிக்கை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கும்போதே திஸ்ஸ அத்தநாயக்க மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களை நோக்குகையில், எதிர்வரும் ஜெனிவாக் கூட்டத்தொடரில் இலங்கை சவாலை எதிர்கொள்ளும் என்றே தோன்றுகின்றது.

ஆணையாளரின் அறிக்கையில் போரில் சம்பந்தப்பட்ட இருதரப்புக்கள் தொடர்பிலும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக போர் முடிவடைந்து சுமார் 11 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இன்னமும் முறையான பொறிமுறை ஒன்றினூடாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படாமை தொடர்பில் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டம் குறித்தும் மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தில் காணப்படும் குறைபாடுகளைத் திருத்தியமைக்குமாறே நாம் வலியுறுத்தினோம். எனினும், அரசு அதனை முழுமையாக இல்லாதொழித்து 20 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியது.

எனவே, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை விரிவாகவும் ஆழமாகவும் ஆராயவேண்டியது அவசியமாகும். அதுமாத்திரமன்றி அதனை முழுமையாக ஆராய்ந்து எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள ஜெனிவாக் கூட்டத் தொடரின்போது அதற்கு முறையான பிரதிபலிப்பையும் வெளிக்காட்ட வேண்டிய தேவையிருக்கின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் அனைத்து விடயங்களையும் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை. ஆனால், அனைத்தையும் புறக்கணித்து விடவும் முடியாது. சர்வதேசத்தின் மத்தியில் ஏனைய நாடுகளின் உதவியின்றி எம்மால் தனித்துப் பயணிக்க முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

எமது நாட்டின் மீது சர்வதேசத்தால் பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படலாம். எனினும், நாம் இவை அனைத்தையும் நடுநிலையுடன் ஆராய்ந்து, ஐ.நா. மனித உரிமைகள் சபையுடனும் கலந்தாலோசித்து, நேர்மறையான தீர்வொன்றை நோக்கிப் பயணிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதே புத்திசாலித்தனமான செயற்பாடாகும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.