எமது பொறுமைக்கு ஓர் எல்லையுண்டு!-வடிவேல் சுரேஷ் எம்.பி.

(க.கிஷாந்தன்)

 

எமது பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு. எனவே, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு  அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படவேண்டும். இல்லையேல் இம்முறை போராட்டமானது வேறு வடிவில் அமையும் – என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் எச்சரிக்கை விடுத்தார்.

 

நுவரெலியாவில் (31)இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

 

“இந்த நாட்டில் மாறி, மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் எமது தொப்புள்கொடி உறவுகளை தொடர்ச்சியாக ஏமாற்றியுள்ளன. கடந்த நல்லாட்சியின் போதும் சம்பள விடயத்தில் துரோகம் இழைக்கப்பட்டது. அந்த சாபத்தால் தான் ஐக்கிய தேசியக்கட்சி இன்று அழிந்துள்ளது. தலைவர், செயலாளர் என எவரும் பாராளுமன்றத்தில் இல்லை.

 

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்படும் என நாட்டில் ஜனாதிபதி அறிவிப்பு விடுத்தார். ஆனால் அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் நிதி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ஆயிரம் ரூபா குறித்த யோசனையை முன்மொழிந்தார்.

 

வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகள் அரசாங்கத்தால் நிறைவேற்றப்படும். எனவே, தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் மட்டும் எதற்கு கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அரசாங்கம் சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.  கம்பனிகளுக்கு தேயிலை சபை மற்றும் திறைசேரி ஊடாக நிவாரணங்களை வழங்கலாம்.

 

அடிப்படை சம்பளத்தை 25 ரூபாவால் உயர்த்துவதே கம்பனிகளின் கோரிக்கை. இதனை ஏற்கமுடியாது. ஆயிரம் ரூபா அவசியம். சம்பள நிர்ணயசபை 6 ஆம் திகதி கூடவுள்ளது. அதன்மூலம் ஆயிரம் ரூபா பெறுவதற்கு முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும். ஏனைய தொழிற்சங்கங்களும் வழங்கும் என நம்புகின்றோம்.

 

பெப்ரவரி 10 ஆம் திகதிக்குள் சம்பள உயர்வு கிடைக்கவேண்டும். இல்லையேல் இம்முறை போராட்டம் வேறுமாதிரியாக அமையும். எமது பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு.” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.