வாழைச்சேனை-தீர்மானத்தினை மீறி மீண்டும் இரவோடு மணல் அகழ்வு – போராட்டத்தில் இளைஞர்கள்

(ந.குகதர்சன்)

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவின் நாசிவன்தீவு கிராமத்தில் மணல் அகழ்வு மற்றும் மணல் கழுவுதல் திட்டத்தினை உடனடியாக நிறுத்துமாறு வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்த நிலையில் நேற்று(30) சனிக்கிழமை இரவு மீண்டும் அகழப்பட்ட மணல் வாகனத்தில் ஏற்றி கொண்டு செல்லவதற்கு தயாரான நிலையில் பொதுமக்கள் ஒன்றிணைந்து தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவின் நாசிவன்தீவு கிராமத்தில் அமைக்கப்பட்ட இலங்கை மீன்பிடித்துறைக் முகங்கள் கூட்டுத்தாபனத்தின் மணல் அகழ்வு மற்றும் மணல் கழுவுதல் திட்டத்தினை நிறுத்துமாறு பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் விசேட ஒன்று கூடல் செயலக கேட்போர் கூடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாளேந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திட்டத்தினை உடனடியாக நிறுத்துமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

இந்த நிலையில் மணல் அகழ்வு மற்றும் மணல் கழுவுதல், மணலை ஏற்றிச் செல்லல் போன்ற வேலைகளை உடனடியாக நிறுத்துமாறு கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதை பொறுப்பெடுத்தாமல் நேற்று சனிக்கிழமை இரவு வாகனத்தில் மணல் ஏற்றப்பட்டு வெளிச் செல்வதற்கு தயாரான நிலையில் கேள்வியுற்ற பிரதேச இளைஞர்கள், பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு சென்று உடனடியாக மணல் ஏற்றுவதை நிறுத்துமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதனையைடுத்து வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தலைமயிலான பொலிஸார் வருகை தந்து மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடி ஏற்றப்பட்ட மணலை ஏற்றிய இடத்தில் மீண்டும் கொட்டுமாறு பணிப்புரை விடுத்ததுடன், உடனடியாக குறித்த இடத்தில் இருந்து தங்களுடைய உடமைகளுடன் வெளியேறுமாறு பொலிஸாரால் பணிப்புரை வழங்கப்பட்டது.

 

சம்பவ இடத்தில் ஒன்று கூடிய வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களாக கே.குணசேகரன், க.கமலநேசன், பிரதேச இளைஞர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலைந்து சென்றதுடன், மீண்டும் இடம்பெறாத வண்ணம் உரிய அரச அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வேண்டுமாறும், தீர்மானித்தை பொய்யாக்காத வகையில் செயற்படுமாறும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

 

அத்தோடு இலங்கை மீன்பிடித்துறைக் முகங்கள் கூட்டுத்தாபனத்தின் மணல் கழுவுதல் மற்றும் அகழ்வாராட்சி திட்டத்தை நிறுத்துமாறு கோரி பிரதேச இளைஞர்கள் தொடரச்சியாக போராட்டம் இடம்பெற்று வரும் நிலையில் இளைஞர்களை புலனாய்வு துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.