இலங்கையில் ஜனவரியில் 112 மரணங்கள்; 20,858 பேருக்குக் கொரோனா

இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்ட ஒட்டுமொத்த கொரோனா வைரஸ் தொற்று நோயாளர் மற்றும் கொரோனா மரணங்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு ஜனவரி மாதத்தில் மட்டும் பதிவாகியுள்ளது எனச் சுகாதார அமைச்சின் உத்தியோகபூா்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனவரி மாதத்தில் மட்டும் 112 கொரோனா மரணங்கள் இலங்கையில் பதிவாகியுள்ளன. இது நாட்டில் இதுவரை பதிவான ஒட்டுமொத்த கொரோனா மரணங்களில் 35.44 வீதமாகும்.

ஜனவரி ஆரம்பத்தில் இலங்கையில் கொரோனா மரணங்களில் எண்ணிக்கை 204 ஆக பதிவாகியிருந்தது. நேற்று வரையான தரவுகளின் பிரகாரம் உயிரிழப்பு எண்ணிக்கை 316ஆக உயர்ந்துள்ளது.

நவம்பர் மாதத்தில் 98 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில் ஜனவரியில் இது 112 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், ஜனவரி மாதத்தில் இலங்கையில் 20 ஆயிரத்து 858 புதிய கொரோனா தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர். நாட்டில் இதுவரை பதிவான ஒட்டுமொத்த கொரோனா தொற்று நோயாளர்களில் இது 32.51 வீதமாகும்.

கொரோனா மரணங்கள் மற்றும் தொற்று நோயாளர் தொகை அதிகரிப்பு இலங்கையில் கொரோனா தொற்று நோய் இரண்டாவது அலையின் பாதிப்புக்கள் அதிகரித்துள்ளதை வெளிப்படுத்துகிறது.

ஆனால், சுகாதார அதிகாரிகள் கொரோனா இன்னும் சமூகத் தொற்றாக மாற்றமடையவில்லை என மீண்டும மீண்டும் வலியுறுத்தி வருகின்றனர்.

இலங்கையில் கொரோனாத் தடுப்பூசி போடும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள விரும்பும் நாட்டு மக்களின் 65 வீதமானவர்களுக்கு தடுப்பூசிகளை போட முடியும் என்ற எதிர்பார்ப்பை இலங்கை கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.