ஒலுவில் பிரதேசத்தில் சூறாவளி!

ஒலுவில் பிரதேசத்தில் நேற்றிரவு 11.00 மணியளவில் வீசிய பலத்த சூறாவளியால் பாரிய அளவிலான பாதிப்பினை மக்கள் எதிர் நோக்கியுள்ளனர்.
அரச கட்டடங்கள், சுற்றுலா விடுதிகள், ஹோட்டல்கள், மின்கம்பங்கள், தொலைத்தொடர்பு கம்பங்கள், மரங்கள் மற்றும் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் வயல்களும் பலத்த சேதத்தை அடைந்துள்ளது.
ஒலுவில் பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் வீசிய பலத்த சூறாவளியால் மக்களின் அன்றாட இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
ஒலுவில் பிரதேசத்தில் அமைந்துள்ள பிரதான உணவகங்களான கிரீன் வில்லா, வயல் வாடி என்பனவும் பாரிய சேதத்திற்குள்ளகியுள்ளன. வயல் வாடி உணவகத்தின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றும் மரக்கிளை முறிந்து விழுந்து பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது.
விசேடமாக ஒலுவில் பிரதேசத்திற்கான பிரதான மின் பிறப்பாக்கியின் அருகாமையில் அமைந்துள்ள கமநல சேவை மத்திய நிலையத்தின் கூறைத் தகடுகள் காற்றினால் மேலெழும்பி மின் பிறப்பாக்கி மீது வீசப்பட்டு மின் பிறப்பாக்கி பாதிப்படைந்துள்ளது.
இதனை சீர் செய்யும் பணிகளில் மின்சாரசபை, தொலைத்தொடர்பு சபை, அட்டாளைச்சேனை பிரதேச சபை ஆகியன இணைந்து மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அத்துடன் நேற்றிரவு தொடக்கம் ஒலுவில் பிரதேசம் இருளில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.