பேரணியின் இடைநடுவில் வந்து சிவன் பூஜையில் கரடி புகுந்தமாதிரி சிலர் கோஷங்களை முன் வைப்பது ஆபத்தானது – ரவூப் ஹக்கீம்
(நூறுல் ஹுதா உமர்)
காலாகாலமாக எமக்கிடையில் இருக்கும் முரண்பாடுகளை இந்த பேரணியுடன் முடிச்சிப்போட்டு எங்களின் ஒற்றுமைக்கு கலங்கம் ஏற்படுத்த கூடாது. எமது ஒற்றுமையை குலைத்து விடாது நாங்கள் எல்லோரும் ஒருமித்த வகையில் நியாயமான கோரிக்கைகளை எங்களுக்கிடையே பேசி தீர்த்துக்கொள்ளலாம். இவ்வாறான போராட்டங்களின் போது அதை மட்டும் மையப்படுத்தி கோஷங்களை எழுப்புவதன் மூலம் எமக்கிடையில் உருவாகி வரும் இணைக்கப்பாடு சிதைந்து விடும். எதிர்காலத்தில் தமிழ் பேசும் மக்களுக்கு மத்தியில் மட்டுமல்ல சிங்கள மக்களுக்கு மத்தியிலும் நல்லிணக்கம் உருவாக வேண்டும். இந்த நாட்டின் அராஜகத்திற்கு எதிராக ஒன்றுபடுகின்ற பேரணியில் இடைநடுவில் வந்து சிவன் பூஜையில் கரடி புகுந்தமாதிரி சிலர் கோஷங்களை வைப்பது ஆபத்தானது. அது தவிர்க்கபட்டப்பட்ட வேண்டியது. என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
நேற்று பகல் (07) கல்முனையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி தொடர்பில் கருத்துக்கள் கேட்டபோது கல்முனை பிரதேசத்தை பேரணி கடந்து சென்ற வேளையில் கல்முனை உப பிரதேச செயலக தரமுயர்த்தல் மற்றும் வடகிழக்கு இணைப்பு தொடர்பிலான கோஷங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அங்கு பேசிய அவர்,
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மு.கா எம்.பிக்களுக்கு ஆலோசனை வழங்கினேன். கலந்து கொள்ள வாய்ப்பிருந்த முன்னாள் எம்.பி ஏ.எல்.எம். நஸீர் உட்பட எல்லோரும் கலந்து கொண்டனர். சுதந்திரத்தை பெற்றுக்கொள்ள மூன்று இனங்களும் இணைந்து போராடியே சுதந்திரத்தை பெற்றுக்கொண்டோம். அதன் பின்னர் அரச வைபகங்களில் கலந்து கொள்வதில் அண்மைக்காலங்களில் இந்த அரசின் தலைமைத்துவத்துவம் அசமந்தமாக நடந்து கொள்வதாக ஒரு விசனம் நிலவுகிறது. இதன் காரணமாக ஒரு சில சம்பவங்கள் இப்படி நடக்கிறது.
தமிழ் பேசும் மக்கள் மட்டுமல்ல இந்த நாட்டின் நீதியான சுதந்திரமான சட்டத்துறை ஆட்சியில் நாட்டமுள்ள சகல தரப்பும் இந்த பேரணிக்கு ஆதரவளிக்கிறது. இது வெறுமனே தமிழ் பேசும் மக்களின் போராட்டம் அல்ல. இந்த நாட்டின் சகல இன மக்களும் சேர்ந்து நேர்மையான நியாயமான ஆட்சி நடைபெற வேண்டும். சட்டத்தின் ஆட்சி நடக்க வேண்டும் .அராஜகம் இல்லாதொழிய வேண்டும் என்பவர்களின் போராட்டம். தமிழ் முஸ்லிம் மக்களின் பிரச்சினை மாத்திரமல்ல இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களின் எதிர்காலம் குறித்த பிரச்சினைகளும் இதில் உள்ளடங்கியுள்ளது.
தமிழர் தரப்பில் அவர்கள் சார்ந்த கோரிக்கைகள் தனியாகவும், முஸ்லிங்கள் தனியாகவும் பிரச்சினைகள் இருப்பதென்பது புவியியல் ரீதியாக இருந்துகொண்டுதான் வருகிறது. காலாகாலமாக இருக்கும் அந்த முரண்பாடுகளை இந்த பேரணியுடன் முடிச்சிப்போட்டு எங்களின் ஒற்றுமைக்கு கலங்கம் ஏற்படுத்த கூடாது. எமது ஒற்றுமையை குலைத்துவிடாது நாங்கள் எல்லோரும் எங்களின் நியாயமான கோரிக்கைகளை எங்களுக்கிடையே பேசி தீர்த்துக்கொள்ளலாம். இவ்வாறான போராட்டங்களின் போது அதை மட்டும் மையப்படுத்தி கோஷங்களை எழுப்புவதன் மூலம் உருவாகி வரும் இணைக்கப்பாடும் எதிர்காலத்தில் தமிழ் பேசும் மக்களுக்கு மத்தியில் அதே போல சிங்கள மக்களுக்கு மத்தியிலும் உருவாக வேண்டும். இந்த நாட்டின் அராஜகத்திற்கு ஒன்றுபடுகின்ற பேரணியில் இடைநடுவில் வந்து சிவன் பூஜையில் கரடி புகுந்தமாதிரி சிலர் கோஷங்களை வைப்பது ஆபத்தானது. அது தவிர்க்கபட்டப்பட்ட வேண்டியது என்றார்
கருத்துக்களேதுமில்லை