ஆயிரம் ரூபா சம்பளம்:இராதாகிருஸ்ணன் அரசாங்கத்திற்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்ந்தும் இழுபறி நிலையில் இருக்குமாக இருந்தால் அது அரசாங்கத்திற்கும் தொழிலார்களுக்கும் பாரிய பிரச்சினையை ஏற்படுத்தும். எனவே அரசாங்கம் நிபுணர் குழு ஒன்றை அமைத்து உடனடி தீர்வை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று (08) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

நேற்று (08) நடைபெற்ற சம்பள பேச்சுவார்த்தையிலும் எந்தவிதமான தீர்க்கமான முடிவும் எட்டப்படாமல் பேச்சு வார்த்தை நிறைவடைந்துள்ளதாக தெரிய வருகின்றது. தோட்ட கம்பனிகள் 1000.00 ரூபா அடிப்படை சம்பளம் என்ற விடயத்தை ஏற்றுக் கொள்ள மறுத்து வருவதாக தெரியவருகின்றது.

இவ்வாறான ஒரு நிலையில் தொடர்ந்தும் இந்த நிலையை முன்கொண்டு செல்ல முடியாது.எனவே இதற்கு உடனடியாக அராசாங்கம் நிபுணர் குழு ஒன்றை அமைக்க வேண்டும்.

அந்த நிபுணர் குழுவில் கம்பனிகள் சார்பாகவும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்கள் ஏனைய தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவம் செய்கின்றவர்கள் சார்பாகவும் பொருளாதார துறை சார்ந்த நிபுணர்கள் தோட்ட தொழிலாளர்கள் சார்பாக ஒரு பெண் உட்பட மூவரும் அரசாங்கத்தின் சார்பாகவும் இந்த குழுவில் அங்கத்துவம் வகிக்கின்ற வகையில் அந்த குழுவை ஏற்படுத்த வேண்டும்.

அவர்களுக்கு ஒரு குறுகிய கால இடைவெளியை கொடுத்து ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும். அப்படி செய்கின்ற நிலையில் தோட்ட கம்பனிகளின் உண்மையான நிலைமை வெளிவரும். அவர்கள் கூறுவது போல தோட்டங்கள் நஸ்டத்தில் இயங்குகின்றதா? அல்லது இலாபத்தில் இயங்குகின்றதா?என்ற கேள்விக்கு தெளிவான விடை கிடைக்கும்.

அந்த விடையை கொண்டு தொழிலார்களின் கருத்துகள் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்களின் கருத்துகள் அரசாங்கத்தின் நிலைப்பாடு சம்பள நிர்ணய சபையின் நிலைப்பாடு நாட்டில் இருக்கின்ற பொருளாதார சூழ்நிலை இவை அனைத்திலும் கவனம் செலுத்தி 1000.00 ரூபா அடிப்படை சம்பளம் என்ற விடயத்திற்கு ஒரு தீர்மானத்திற்கு வர முடியும். மேலும் இந்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் வெளிப்படை தன்மை கொண்டதாக அமைய வேண்டும்.

இந்த பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படாவிட்டால் இது தொழிலாளர்களையும் தோட்ட கம்பனிகளையும் அரசாங்கத்தையும் பாதிக்கின்ற ஒரு செயலாக மாறிவிடும். ஏனெனில் சர்வதேச சந்தையில் எங்களுடைய தேயிலைக்கு இருக்கின்ற கேள்வி குறைவடையலாம். எங்களுடைய தேயிலையை இறக்குமதி செய்கின்ற நாடுகளில் தொழிலாளர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்கப்படாவிட்டால் பல நாடுகளில் தேயிலை இறக்குமதி செய்வதை நிறுத்துவதற்கான வாய்ப்பு இருக்கின்றது.

இதன் மூலமாக எங்களுடைய நாட்டின் அந்நிய செலவானியில் சிக்கலான ஒரு நிலைமை ஏற்படலாம். இன்றைய கொரோனா தொற்று நோய் காரணமாக பின்டைந்துள்ள எமது பொருளாதாரம் இன்னும் பின்னடைவை சந்திக்க வாய்ப்பு உண்டு. அதே நேரம் தொழிலாளர்களும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவார்கள். உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுத்தும். அது பெருந்தோட்ட கம்பனிகளையும் பாதிப்படைய செய்யும்.

எனவே இந்த விடயங்கள் அனைத்தையும் அரசாங்கம் கருத்தில் கொண்டு அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கியதாக நிபுணர் குழு ஒன்றை அமைத்து உடனடி தீர்வை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பெருந்தோட்ட பகுதிகளில் அசாதாரண சூழ்நிலை ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது.

அனைத்து தொழிலாளர்களும் ஒற்றுமையாக இருக்கின்றார்கள் என்பதையும் தொழிற்சங்கங்கள் ஒற்றுமையாக செயற்படுகின்றது என்பதையும் கடந்த ஒரு நாள் வேலை நிறுத்தம் அனைவருக்கும் புரிய வைத்துள்ளது என்பதையும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.