யாழ்-வலிகாமத்தில் மாணவர்கள் சிலரின் ஆடைகளை களைந்து பாடசாலை ஆசிரியர்கள் சோதனை!

யாழ்ப்பாணம்- வலிகாமத்திலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவர்கள் மீது அதே பாடசாலையில் கல்வி கற்ப்பிக்கும் ஆண் ஆசிரியர்கள் சிலரால் பாலியல் துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த  சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில்  முறைப்பாடு  பதிவு செய்யப்பட்டுள்ளது.

வலிகாம பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் தரம் 11யைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட ஆண் மாணவர்களை, அவர்களது சம்மதம் இன்றி வலுக்கட்டாயமாக உடலில் பச்சை குத்தியதை பார்வையிட வேண்டும் என கூறி, பாடசாலையின் தனியான ஓர் இடத்திற்கு ஆசிரியர்களால் அழைத்துச் செல்லப்பட்டு அவர்களின் மேல் மற்றும் கீழ் ஆடைகள் களையப்பட்டு பார்வையிடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அநேகமான மாணவர்கள், பாடசாலை செல்லாத நிலையில், அங்கு கல்வி கற்பிக்கும் பெண் ஆசிரியர்களை குறித்த மாணவர்களின் வீடுகளுக்கு அனுப்பி மீண்டும் பாடசாலையில் இணைத்துள்ளனர்.

இச்சம்பவத்தால் தாம் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்து, முறைப்பாட்டாளர் ஊடாக தமது கோரிக்கை கடிதத்தை இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடாக பதிவு செய்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவின் அமைப்பாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது, இந்த சம்பவம் தொடர்பாக முறைப்பாடு கிடைத்ததாகவும் இது தொடர்பில் மாகாண கல்வி அமைச்சை விளக்கமளிக்குமாறு எழுத்துமூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.