இளம் சமுதாயத்தின் கல்வித் தேடல்களில் இணையவழி வன்முறைகள் தொற்றுக் காலத்தில் மேலோங்குகிறது-இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ்

(பாறுக் ஷிஹான்)

உலகில் வாழும் மக்களை இன்று மரண அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கி வருகின்ற ஒன்றாக கொரோனா தொற்று காணப்படுகிறது. இக்கட்டான சூழ்நிலைகளைக் கருத்திற் கொண்டு நாட்டின் பல பகுதிகள் முடக்கி விடப்பட்டன. இக்காலத்தில் பாடசாலை மாணவர்கள் இணைய வழி கற்கைகளை மேற் கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக கையடக்கத் தொலைபேசி பாவனை மாணவர்களுக்கு பெற்றோர்களின் முழு அங்கீகாரத்துடன் வழங்கப்பட்டு வருகிறது. இளம் சமுதாயத்தின் கல்வித் தேடல்களில் இணையவழி வன்முறைகள் தொற்றுக் காலத்தில் மேலோங்குகிறது என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.

தொற்றுக் காலத்தின் போது சிறுவர்களுக்கு எற்பட்டுள்ள இம்சைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கல்முனை அலுவலகத்தில் நேற்று   (17) நடைபெற்ற நிகழ்வின் போது சிறுவர் தொடர்பான அதிகாரிகள், சுகாதார துறையினர், பொலிஸ் மற்றும் நன்னடத்தை அதிகாரிகள் முன்னிலையில் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது

வீட்டுச் சூழலில் சிறுவர்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களும், குறிப்பாக பாதுகாப்பும், அன்பும், அரவணைப்பும் வழங்க வேண்டிய பெற்றோர்களின் கண்காணிப்பிலிருந்து தூரமாக்கப்படுவதால், எமது நாட்டில் சிறுவர் புறக்கணிப்பு, உடல், உள ரீதியான தண்டனை, மற்றும் பாலியல் துஷபிரயோகங்கள் இடம்பெறுகின்றன. சில பாலியல் சம்பவங்கள் உறவு முறைகளினாலும், இன்னும் சில சம்பவங்கள் தனிப்பட்ட ரீதியிலும், நடைபெறுவதை எம்மால் அறிய முடிகிறது.

பெரும்பாலான சிறுவர் துஷ்பிரயோகங்கள் பொலிஸ் நிலையங்களிலும், ஏனைய சமூக மட்டத்திலும் விசாரணை செய்யப்பட்டாலும், அவைகள் நீதிமன்றம் வரை கொண்டு செல்லப்படாமல் சமாதானப்படுத்தப்பட்டு வருகின்றமை கவலைக்குரியது. இதனால் தப்புச் செய்கின்றவர்கள் இலகுவில் தப்பித்துக் கொள்கின்றனர். இதற்கு சாட்சிகள் முன்வராமை, சமுகத்தின் ஏளனமான பார்வை, ஆதாரங்கள் அழிக்கப்படல் என்பவைகள் வழக்கொன்றை தொடர்வதற்கு பலமற்ற விடயங்களாக இருக்கின்றது. அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மீள்பாதிப்புக்குள்ளாகியும், இரட்டிப்பு பாதிப்புக்குள்ளாகியும். பல்முனைப் பாதிப்புக்குள்ளாகியும் வருகின்றனர். பிள்ளைகளின் அறிவுக்கும் வளர்சிக்கும் ஏற்றாற்போல் சவாலுக்குரிய நடத்தையுடைய பிள்ளைகள் எமது பிரதேசத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

சமுகத்தில் உள்ளவர்களின் வறுமை, கல்வியறிவின்மை போன்ற காரணங்களினால் பெற்றோர்கள் அறியாத வகையில், சிறுவர்கள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இவ்வாறான செயல்கள் மூலமாக சிறுவர் உரிமை எத்தகைய விதத்தில் பாதிப்படைகிறது என்பதை எவரும் ஆழமாக நோக்குவதில்லை.

கல்வி கற்கின்ற பிள்ளைகளுக்கு பாதுகாப்பிற்கான உரிமை உண்டு. உடல் ரீதியான அல்லது உள ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் தீங்குகளிலிருந்தும் பிள்ளையை பாதுகாப்பதற்கு பொருத்தமான சட்டவாக்க, நிருவாக, சமூக மற்றும் கல்வி நடவடிக்கைகளை அரச தரப்பினர் எடுக்க வேண்டுமென சிறுவர் சமயாத்தின் ஒன்பதாவது உறுப்புரை கூறுகிறது. இதனடிப்படையில் ஆசிரியர்கள் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக அற்பணிப்புடன் செயற்பட வேண்டிய தேவை இருக்கிறது.

சட்டம் ஒரு சமுகத்தின் அமைதியையும், நீதியையும் நிலைநாட்ட அடிப்படையாக அமைகின்றது. குறிப்பாக வேறு வேறு சட்டங்கள் தனித்தனி நோக்கங்களைக் குறிக்கோளாக கொண்டிருக்கிறது. சிறுவர் தொடர்பிலான குற்றவியல் குற்றங்கள் ஒரு தனி நபருக்கெதிரான தனிப்பட்ட குற்றங்களாகக் கருதப்படாமல் முழு சமுகத்திற்கும் எதிரான குற்றங்களாகவே அனைவராலும் நோக்கப்படுகிறது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.