கல்முனை மாநகர சந்தையின் ஆதிக்கம் கைநழுவியதாலேயே உறுப்பினர் மனாப் என்னை அபாண்டமாக விமர்சிக்கிறார்-மாநகர முதலவர் றகீப்

கல்முனை பொதுச் சந்தையானது மாநகர சபையினால், சட்டப்படி பகிரங்க விலைமனுக்கோரல் (Tender) செய்யப்பட்டு, குத்தகைக்கு வழங்கப்பட்டதால், கடந்த 30 வருட காலமாக அச்சந்தையில் தனது குடுமபத்தினருக்கிருந்து வந்த ஆதிக்கம் கைநழுவிச் சென்றிருப்பதாலேயே மாநகர சபை உறுப்பினர் அப்துல் மனாப், என்னை அபாண்டமாக விமர்சித்து, குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றார் என்று மாநகர முதலவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.

இது தொடர்பாக முதலவர் ஏ.எம்.றகீப் மேலும் தெரிவிக்கையில்;

தான் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாநகர சபை உறுப்பினர் என்று இவர் கூறியியிருப்பதே அப்பட்டமான பொய்யாகும். இவர் கடந்த மாநகர சபைத் தேர்தலில் 17ஆம் வட்டாரத்தில் போட்டியிட்டு, படுதோல்வியடைந்தவர். மக்களால் நிராகரிக்கப்பட்ட இவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மூலம் நியமன உறுப்பினராகவே மாநகர சபைக்கு வந்துள்ளார். அது கூட சுழற்சி முறையில் வழங்கப்பட்டதாகும். கட்சித் தீர்மானத்திற்கமைவாக ஓரிரு வருடத்தில் அப்பதவியை இராஜினாமா செய்யாமல், மூன்றாவது வருடமாகவும் அப்பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கிறார்.

மருதமுனை உள்ளிட்ட ஏனைய ஊர்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நியமன உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஒரு வருட நிறைவில் இராஜினாமா செய்து, அடுத்தவர்களுக்கு சந்தர்ப்பமளித்து வருகின்ற நிலையில் இவர் மாத்திரம் பதவியாசை காரணமாக தனது கட்சியின் தீர்மானத்தை மீறியுள்ளார். இதன் மூலம் அக்கட்சியை கல்முனையில் இருந்து அழிப்பதற்கு இவர் காரணகர்த்தாவாக இருக்கிறார். இவ்வாறான ஏமாற்று பேர்வழிகள் சமூகத்தில் நியாயம் பேச வந்திருப்பது வெட்கக்கேடாகும்.

இவர் கல்முனை மாநகர சபையின் பட்ஜெட்டை எதிர்த்தமைக்கு, முதல்வராகிய நான் சர்வதிகாரப் போக்குடன் செயற்படுவதே காரணம் எனக் கூறியுள்ளார். உண்மையான காரணம் அதுவல்ல. 30 வருடங்களுக்கு மேலாக அவரது குடும்பத்தின் ஆதிக்கத்திலிருந்த கல்முனை மாநகர பொதுச் சந்தை தற்போது அவர்களது பிடியிலிருந்து கைநழுவிச் சென்றிருப்பதே காரணம் என்று நான் அடித்துக் கூறுவேன்.

குறித்த உறுப்பினரின் தந்தையாரே நீண்ட காலமாக கல்முனை மாநகர பொதுச் சந்தையை குத்தகைக்கு பெற்று நடத்தி வந்திருக்கிறார். அதனால் அவர் மார்கட் குழந்தை என்றே அழைக்கப்பட்டார். 2018ஆம் ஆண்டுவரை அவரது குடும்பத்தினர்தான் மாநகர சபைக்குரிய பாரிய சொத்தை ஆண்டு, அனுபவித்து வந்துள்ளனர். வருடக்கணக்கில் சந்தைக்குத்தகை நிலுவைகளை செலுத்தாமல் இருந்து வந்திருப்பதுடன் அவை தொடர்பிலான கோவைகளை மாநகர சபையிலிருந்து அகற்றியுமுள்ளனர்.

நான் 2018ஆம் ஆண்டு மாநகர முதல்வராக பதவியேற்ற பின்னர் இந்த சந்தையை குத்தகைக்கு வழங்குவதற்குரிய சட்டப்படியான நடவடிக்கைகளை எடுத்திருந்தேன். அதற்காக தேசிய பத்திரிகைகளில் பகிரங்க விலைமனுக்கோரல் விளம்பரத்தை வெளியிட்டு, அதில் கோரப்படுகின்ற நிபந்தனைகளுக்குட்பட்டு விண்ணப்பிக்கின்ற நபர்களில் அதிகூடிய தொகையை முன்மொழிகின்ற கேள்விதாரருக்கு சந்தையை குத்தகைக்கு வழங்கும் நடைமுறை அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

இதன்படி 2019ஆம் ஆண்டு இவரது குடும்பத்தை சாராத வேறொருவரினால் இச்சந்தை குத்தகைக்கு பெறப்பட்டிருந்தது. 2020ஆம் ஆண்டு மீண்டும் இந்த உறுப்பினரின் குடும்ப உறவினர் ஒருவர் சந்தையை குத்தகைக்கு எடுத்திருந்தார். ஆனால் அதற்குரிய மீதிப்பணத் தொகையான சுமார் 18 இலட்சம் ரூபாவை அவர் இன்னும் செலுத்தாதனால் வழக்குத்தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

இவ்வாறுதான் கடந்த காலங்களிலும் மாநகர சபைக்கு செலுத்த வேண்டிய நிலுவைகளை அவர்கள் செலுத்தாமல் மாநகர சபையை ஏமாற்றி வந்துள்ளனர். இதனால மாநகர சபைக்கு கிடைக்க வேண்டிய பாரிய வருமானம் இழக்கப்பட்டிருக்கிறது.

இம்முறை (2021) இவர்களது திருகுதாளங்களைக் கவனத்தில் கொண்டு, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் அறிக்கையின் பிரகாரம், பத்திரிகை விலைமனுக் கோரலில்ன்போது 20 வீதத்தை பணமாகவும் மீதி 80 வீதமான தொகைக்கு வங்கி உத்தரவாதக் கடிதத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதித்திருந்தோம்.

இந்நிலையில், இம்முறை விலைமனுக்கோரலில் இந்த உறுப்பினரின் உடன் பிறந்த சகோதரரின் மகனே சந்தைக்கு அதிகூடிய விலைமனுவான 62 இலட்சத்து 999 ரூபாவை முன்மொழிந்து, குத்தகைக்காரராக தெரிவானார். இதையடுத்து உரிய நிபந்தனைகளை நிறைவு செய்து விட்டு, சந்தையை பொறுப்பேற்குமாறு அவருக்கு அறிவித்தோம். ஆனால் வங்கி உத்தரவாதக் கடிதத்தை உடனடியாக சமர்ப்பிக்க முடியாத்திருப்பதாகத் தெரிவித்து குறித்த உறுப்பினரால் கால அவகாசம் கோரப்பட்டது.

2020-10-05ஆம் திகதியன்று விலைமனுப் பத்திரங்கள் திறக்கப்பட்டிருந்த நிலையில், அவர் கேட்டுக் கொண்டதன்படி  2020-10-29ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கினோம். ஆனால் அக்காலப்பகுதிக்குள்ளும் வங்கி உத்தரவாதக் கடிதத்தை சமர்ப்பிக்க முடியாமல் போகவே அந்த உறுப்பினர் மேலும் அவகாசம் கேட்டதன்படி 2020-11-16ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கியிருந்தோம்.

இவ்வாறு இரண்டு தடவைகள் 05 வாரங்களுக்கு மேலான கால அவகாசம் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. இதனிடையே இக்காலப்பகுதியில் இரண்டாம் விலைமனுதாரரை வாபஸ் வாங்குமாறும் அதற்காக 07 இலட்சம் ரூபா சன்மானம் தருவதாகவும் மேற்படி முதலாம் விலைமனுதாரர் வற்புறுத்தி வந்துள்ளார். ஏனெனில் 45 இலட்சம் ரூபாவுக்கு விண்ணப்பித்திருந்த மூன்றாம் விலைமனுதாரரும் குறித்த உறுப்பினரின் குடும்ப உறவினராவார்.

07 இலட்சம் ரூபாவை வாங்கிக் கொண்டு இரண்டாம் விலைமனுதாரர் வாபஸ் வாங்கியிருந்தால், உறுப்பினரின் திட்டப்படி அவரது குடும்பம் சார்பான முதலாம் விலைமனுதாரர் குத்தகையை பொறுப்பேற்காமல் விடுகின்ற அதேவேளை மூன்றாம் விலைமனுதாரர் முன்மொழிந்திருந்த 45 இலட்சம் ரூபாவுக்கு இந்த உறுப்பினரால் சந்தையை குத்தகைக்கு பெற்றிருக்க முடியும். இவ்வாறு 62 இலட்சம் ரூபாவுக்கு போக வேண்டிய சந்தை 45 இலட்சம் ரூபாவுக்கு வழங்கப்பட்டிருந்தால், மாநகர சபைக்கு 17 இலட்சம் ரூபா வருமானம் இழக்கப்பட்டு, அப்பணம் குறித்த உறுப்பினரின் வயிற்றை சென்றடைந்திருக்கும்.

அவரது இப்பித்தலாட்டம் வெற்றியளிக்கவில்லை. அவரது குடும்பம் சார்பான முதலாம் விலைமனுதாரர் பின்வாங்க, இரண்டாம் விலைமனுதாரர் மேற்படி நிபந்தனைகளை நிறைவேற்றி சந்தைக் குத்தகையை பொறுப்பேற்றார்.

சந்தை விடயத்தில் இந்த உறுப்பினரின் பித்தலாட்டத்திற்கு நான் துணைபோகாமல், சட்டப்படி நடந்து கொண்டமையினாலேய குறித்த உறுப்பினர் என் மீது கோபம் கொண்டு, வஞ்சிக்கும் நோக்கில் பட்ஜெட்டிற்கு எதிர்த்து, வாக்களித்ததுடன் மாநகர சபையில் ஊழல் நடப்பதாக ஊடகங்களில் கோஷமிட்டுக் கொண்டு, என்னை எல்லை மீறி விமர்சித்தும் போலிக் குற்றச்சாட்டுகள் சுமத்தியும் எனது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த முனைகின்றார். தன்னிடம் எந்த தகுதி, தராதரமும் இல்லாத நிலையில், இவ்வாறெல்லாம் பேசுவதன் மூலம் தன்னை மக்கள் மீது அக்கறையுள்ள அரசியல்வாதி போன்று காட்டிக்கொள்ள முயற்சித்தாலும் இவர் யார்? இவரது சுயரூபம் என்ன? என்பதையெல்லாம் கல்முனை மக்கள், குறிப்பாக சந்தை வர்த்தகர்கள் அறியாமலில்லை.

மாநகர சபை உறுப்பினருக்கான மாதாந்த கொடுப்பனவு மற்றும் தொலைபேசி கொடுப்பனவு உள்ளடங்கலாக மாதாந்தம் 25 ஆயிரம் ரூபா வீதம் கடந்த 03 வருடங்களில் 09 இலட்சம் ரூபாவை இவர் பெற்றிருக்கின்ற போதிலும் அப்பணத்திலிருந்து ஒரு மின்குமிழ் கூட வாங்கிப்போட்டதற்கான தடயம் இல்லை. ஆனாலும் எங்களை விமர்சித்துக் கொண்டு தன்னை ஒரு சமூக சேவகர் போன்று காட்டிக்கொள்கிறார். அவரது வட்டாரத்தில் அவர் தனது சொந்த செலவில் செய்திருக்கின்ற ஒரு சேவையை அவரால் சொல்ல முடியுமா என சவால் விடுக்கின்றேன்.

இவரது விமர்சனங்களில் ஒன்று, நான் எடுத்ததெற்கெல்லாம் சட்டம் பேசுகின்றேனாம். மாநகர சபைக்கென்று பாராளுமன்றத்தினால் இயற்றப்பட்ட மாநகர சபைகள் கட்டளைகள் சட்டங்கள் மற்றும் உப விதிகள் என்பன இருக்கின்றபோது முதல்வரோ உறுப்பினர்களோ அதிகாரிகளோ யாராக இருந்தாலும் அவற்றை மீறி, தாம் நினைத்தவாறு எதையும் செய்ய முடியாது. மாநகர சபையை பொறுத்தவரை ஒரு அங்குலம் நகர்வதாயினும் சட்டப்படியே நகர்ந்தாக வேண்டும். சட்டத்தின் எல்லைக்குள்தான் நின்றாக வேண்டும். அதனால்தான் ஒவ்வொரு விடயம் தொடர்பிலும் நான் சட்டப்படி நடந்து கொள்வதுடன் சபையில் அந்த சட்டங்கள் தொடர்பில் உறுப்பினர்களுக்கு தெளிவை ஏற்படுத்த முனைகின்றேன்.

ஆனால் இவர் போன்ற படிப்பறிவில்லாத உறுப்பினர்களுக்கு அவற்றை புரிந்து கொள்வது கஷ்டமாகவே இருக்கும். சாதாரண ஒரு சங்கத்திற்கும் யாப்பு என்று ஒன்று இருக்கும். அதன்படிதான் அந்த சங்கம் இயங்கும். அவ்வாறாயின் ஓர் அரச நிறுவனத்திற்கு எவ்வளவு இறுக்கமான சட்ட திட்டங்கள் இருக்கும் என்பதையாவது இவர்கள் புரிந்து கொள்வதில்லையா? இவ்வாறான உறுப்பினர்களுக்கு எதுவும் புரியவில்லை என்பதற்காக சட்டங்களுக்கு புறம்பாக இவர்கள் கூறுவது போன்று நான் சபையை நடத்திச் செல்ல வேண்டும் என்று எனக்கு அழுத்தம் தருவது எவ்வளவு அறிவீனமான செயல்? மாநகர சபை தொடர்பிலான அத்தனை வகைப் பொறுப்புகளையும் நானே சுமந்திருக்கின்றேன். நானே அவற்றுக்கு பொறுப்புக்கூற வேண்டியுமுள்ளது என்பதை இவர்கள் புரிந்து கொள்ள மறுக்கின்றனர்.

மேலும், நடக்காத கூட்டத்திற்கு உபசாரச் செலவு காட்டப்பட்டுள்ளதாக அந்த உறுப்பினர் தெரிவித்திருக்கிறார். அச்செலவு அவர் குறிப்பிடுகின்ற கூட்டத்திற்கானதல்ல. 2020-12-02ஆம் திகதி இடம்பெற்ற பட்ஜெட் தயாரிப்பு தொடர்பான விசேட கூட்டத்திற்குரிய உபசார செலவாகும் என்பதைக்கூட கணக்கறிக்கையை வாசித்து அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பது பரிதாபமாகும்.

கல்முனை மாநகர சபையில் ஊழல் இடம்பெறுவதாக அடிக்கடி கூறி வருகின்ற இந்த உறுப்பினர், இது பற்றி ஜனாதிபதி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநருக்கு பல தடவை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்திருக்கின்றார். சிறிய முறைப்பாடாயினும் உரிய விசாரணைகளை மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்கின்ற ஆளுநர், எம்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், இவரது குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையுமில்லை என்பது நிரூபணமாகின்றதல்லவா?

மத்திய அரசாங்கத்தை பொறுத்தளவில் எதிர்க்கட்சியில் இருக்கின்ற எமது முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு அரசாங்கத்தில் எவ்வித செல்வாக்கும் இல்லாத சூழ்நிலையில், ஜனாதிபதியின் பிரதிநிதியான மாகாண ஆளுநரிடமும் எம்மால் எவ்வித செல்வாக்கும் செலுத்த முடியாத நிலையில், எம்மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால், நாங்கள் பிழை செய்யவில்லை என்பதற்கு இதை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

மாநகர சபையின் நிதி சம்மந்தப்பட்ட விடயங்கள் அனைத்தும் மத்திய கணக்காய்வு திணைக்களம், மாகாண கணக்காய்வு திணைக்களம், பாராளுமன்ற கோப் குழு என்பவற்றினால் பரிசீலிக்கப்படுகின்றன. குறைந்தது 03 மாதங்களுக்கு ஒரு முறையாவது அக்கணக்காய்வு உத்தியோகத்தர்கள் மாநகர சபைக்கு நேரடியாக வருகைதந்து கணக்கு விபரங்களை ஆராய்ந்து செல்கின்றனர்.

இதற்கு மேலதிகமாக நான் முதல்வராக பதவியேற்ற பின்னர் கல்முனை மாநகர சபையில் உள்ளக கணக்காய்வு பிரிவொன்று ஏற்படுத்தப்பட்டு, ஒவ்வொரு கொடுக்கல் வாங்கலும் பரீட்சிக்கப்படுகிறது. கிழக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் பட்ஜெட் தொடர்பில் ஐய வினாக்கள் எவையுமில்லாத ஒரு சபையாக கல்முனை மாநகர சபை மாத்திரமே இருக்கிறது.

குறித்த இந்த உறுப்பினர், தனக்கு மின்குமிழ் வழங்கப்படுவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மின்குமிழ் மின்கம்பத்திற்கேயன்றி உறுப்பினருக்கு அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இவர் எந்த வட்டாரத்திற்கும் பொறுப்பானவரல்ல. இவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த வட்டாரத்தில் ஏ.எம்.பைரூஸ் அவர்கள் வெற்றிபெற்று, உறுப்பினராக பணியாற்றி வருகின்றார். அந்த உறுப்பினர் ஊடாகவும் நேரடியாகவும் தேவையான இடங்கள் அனைத்திலும் மாநகர சபையினால் மின்குமிழ்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பொதுவாக கல்முனை மாநகர சபை எல்லைக்குள் தெருவிளக்கு பராமரிப்பு சேவையானது முன்னைய காலங்களை விட வினைத்திறனுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கென மாநகர சபையில் தனியான பிரிவொன்று ஏற்படுத்தப்பட்டு, மாநகர பிரதேசங்கள் 04 வலயங்களாக பிரிக்கப்பட்டு, தெருவிளக்குகள் தொடர்பான தரவுகள் யாவும் கணனிமயப்படுத்தப்பட்டு, ஒவ்வொரு வலயத்திற்கும் தனித்தனி ஆளணியுடன் வாகன மற்றும் உபகரண வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு, தெருவிளக்கு பராமரிப்பு சேவை சிறப்பாக முகாமைத்துவம் செய்யப்பட்டு வருகின்றன.

கடந்த வருடம் ஜூலை மாதம் தொடக்கம் டிசம்பர் வரையான 06 மாத காலத்தில் மாத்திரம் கல்முனை மாநகர சபை எல்லைக்குள் சுமார் 1100 எல்.ஈ.டி. மின்குமிழ்களும் 150 கோப்ரா எல்.ஈ.டீ. மின்விளக்குத் தொகுதிகளுமாக 1250 மின்குமிழ்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த விடயத்தில் தேவையற்ற அரசியல் தலையீடுகளுக்கு இடமளிக்கப்படுவதில்லை.

மேலும் குறித்த உறுப்பினர் மின்குமிழ் கொள்வனவில் ஊழல் இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுவும் அவரது சுயநலனுக்கு நாம் ஒத்துழைக்கவில்லை என்பதால்தான் இக்குற்றச்சாட்டையும் சுமத்தியுள்ளார். அவரிடம் அல்லது அவர் விரும்புகின்ற இடத்தில் அவற்றை நாம் கொள்வனவு செய்யவில்லை என்பதே அவரது பிரச்சினையாகும்.

சந்தை விலை 600 ரூபா பெறுமதியான 02 வருட கால உத்தரவாத எல்.ஈ.டி. மின்குமிழ்களை 440 ரூபாவுக்கும் உத்தரவாதம் இல்லாத சாதாரண  எல்.ஈ.டி. மின்குமிழைகளை 250 ரூபாவுக்கும் கொள்வனவு செய்துள்ளோம். இதனை இந்த உறுப்பினர் 270 அல்லது 260 ரூபாவுக்கு கொள்வனவு செய்து தருவதாக கூறியிருந்தார். ஆனால் அவரது விலையை விட குறைந்த விலைக்கே தரமான மின்குமிழைகளை வாங்கியிருக்கின்றோம். இதனால இவருக்கு இலாபம் எதுவும் கிடைக்கவில்லை என்ற ஆத்திரம் இருக்கலாம்.

இந்த உறுப்பினர் தன்னை பிரபல வர்த்தகர் என்று கூறிக்கொண்டு மாநகர சபையின் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்து வருகிறார். குறிப்பாக சபைக்கு சொந்தமான ஐக்கிய சதுக்கத்தில் இரண்டு கடைகளையும் மாநகர பொதுச் சந்தையில் இரண்டு கடைகளையும் இவர் வைத்திருக்கின்றார். மாநகர சபையின் ஓர் உறுப்பினராக இருந்து கொண்டு, மாநகர சபை சொத்துக்களை தன்வசம் வைத்திருப்பது குற்றமாகும். இவற்றுக்கான வாடகை நிலுவைகளையும் இவர் செலுத்தவில்லை. இது விடயமாக உள்ளூராட்சி ஆணையாளரின் அறிவுறுத்தலின்படி சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு மாநகர சபை தயாராகி வருகின்றது.

இவர் போன்ற மோசடி பேர்வழிகளுக்கு நான் உதவி, ஒத்தாசை வழங்கியிருந்தால் இன்று என்னை நல்ல முதல்வராக துதிபாடியிருப்பார்கள். எனினும் இவர்களால் நான் மிக மோசமாக விமர்சிக்கப்படுகிறேன் என்றால், இவர்களது மோசடிகளுக்கு துணை போகாமல் சட்டப்படி நடப்பதுதான் நான் செய்த குற்றமா எனக் கேட்க விரும்புகின்றேன்.

கல்முனை மாநகர சபையைப் பொறுத்தளவில் அதன் முதலாவது சபை அமையப்பெற்ற 2006ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக 15 வருடங்களாக நான் உறுப்பினராக இருந்து வருகின்றேன். கடந்த 03 வருடங்களாக மாநகர முதல்வராக பணியாற்றி வருகின்றேன். கிழக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளில் இவ்வாறு நீண்ட கால அனுபவம், துறைசார் அறிவு, ஆற்றல் நிறைந்த ஒரு மாநகர முதல்வராக நான் மாத்திரமே இருக்க முடியும் என்பதை பெருமையாக சொல்லிக் கொள்ள முடியும்.

நான் ஒரு தொழில் நிபுணத்துவத்துவம் வாய்ந்த சிரேஷ்ட சட்டத்தரணி. அதுவும் நீதவான் நீதிமன்றத்தில் மாத்திரமல்லாமல், மாவட்ட நீதிமன்றம், மேல் நீதிமன்றம், சிவில் மேல் நீதிமன்றம் என பொத்துவில் தொடக்கம் வாழைச்சேனை வரையான அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்குகளை பேசி வருகின்றேன். ரிட் எனும் நிர்வாக சட்டத்துறையில் சிறப்பு வழக்கறிஞராகவும் அரச, தனியார் காணிகள் கையாளுகை சம்மந்தமான சிவில் வழக்கறிஞராகவும் பணியாற்றி வருகின்றேன்.

மேலும், மாநகர சபை கட்டமைப்பு, நிர்வாக முகாமைத்துவம், உள்ளூராட்சி அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்தல் தொடர்பிலான பட்டப்பின் படிப்பை தென்கொரிய IUCT பல்கலைக் கழகத்திலும் மாநகர சபை சொத்துக்கள் பராமரிப்பு, கையாளுகை மற்றும் நிதி முகாமைத்துவம் தொடர்பில் அவுஸ்திரேலிய RMIT பல்கலைக் கழகத்திலும் பட்டப்பின் படிப்பை பூர்த்தி செய்துள்ளேன்.

மேலும், நகர அபிவிருத்தி அதிகார சபை சட்டத்தின் கீழ் அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் கருத்திட்டங்கள் வகுத்தல் தொடர்பான பட்டப்பின் படிப்பையும் சூழலியல் சட்டத்தின் கீழ் நிலைபேறான அபிவிருத்தி தொடர்பிலான பட்டப்பின் படிப்பையும் சர்வதேச விவகாரங்கள் மற்றும் உறவுகள் தொடர்பான பட்டப்பின் படிப்பையும் பூர்த்தி செய்திருக்கிறேன்.

இவ்வளவு தகுதிகளையும் கொண்ட ஒரு முதல்வராகவே கல்முனை மாநகர சபையை நான் வழிநடாத்துகின்றேன். துறைசார் அறிவாற்றலை நிறையவே கொண்டிருக்கின்ற நான், கடத்தல் வியாபாரியினதும் ஏமாற்றுப் பேர்வழிகளினதும் அழுத்தங்களுக்கு அடிபணிந்து, ஒருபோதும் சபையை பிழையாக வழிநடாத்த தயாரில்லை என்பதுடன் சபையின் அனைத்து நடவடிக்கைகளும் மக்கள் நலன்களை முன்னிறுத்தி, சட்டப்படியே முன்னெடுக்கப்படும் என்று ஆணித்தரமாக கூறிவைக்க விரும்புகின்றேன்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.