விவசாயிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்த பின் நெல்லை கொள்வனவு செய்வது பொருத்தமாக இருக்கும் -செல்வம் அடைக்கலநாதன்

விவசாயிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுத்த பின் விவசாயிகளிடம் இருந்து தேவையான நெல்லை கொள்வனவு செய்வது பொருத்தமாக இருக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில் இன்று (20) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “விவசாயிகள் அனைவரும் இரவு பகல் பாராமல் தூக்கத்தை தொலைத்து கடன்பட்டு நகைகளை அடகு வைத்து விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்களிடம் உரமானியத்தை காரணம் காட்டி குறிப்பிட்ட அளவு நெல் கொள்வனவு செய்வது விவசாயிகளை மீண்டும் எழ்மை நிலைக்கு தள்ளிவிடும் செயற்பாடாகும்.

விவசாயிகளின் நலனில் அக்கறை இருந்தால் உரமானியத்தை காரணம் காட்டி அவர்களிடமிருந்து நெல் கொள்வனவு செய்வது தற்போது கைவிடப்பட வேண்டும்.

ஏனெனில் விவசாய பயிர்ச் செய்கையின் ஆரம்ப காலங்களில் பெய்த மழை காரணமாக அதிக அளவில் அழிவுகளும் இழப்புக்களும் விவசாய செய்கைக்கு ஏற்பட்டுள்ளது.

எதிர்பார்த்த அளவில் விளைச்சலும் இல்லை. நெல் சந்தைப்படுத்தல் சபை கேட்பதுபோல் காய வைக்கும் அளவிற்கு தள வசதிகள் இல்லை. அதிகளவான விவசாயிகள் வீதி ஓரங்களிலே நெல்லை காய வைக்கும் நிலையை நாங்கள் பார்க்கின்றோம்.

அத்துடன், அதிகளவான நெல்லை பாதுகாத்து வைக்கும் களஞ்சியங்கள் இல்லை. மேலும் விவசாயிகள் நெல் வைக்கப்பட்ட இடத்திலிருந்து நெல் கொடுக்கப்படும் இடங்கள் வெகு தூரத்தில் உள்ளன. இதனால் போக்கு வரத்து செலவு இரட்டிப்பாகின்றது.

இதேநேரம் தனியார் அறுவடை செய்யும் வயல் அருகில் வந்து பச்சையாக நெல் கொள்வனவு செய்வதால் விவசாயிகளின் சுமை ஓரளவிற்கேனும் குறைக்கப்படுவதாக பெருமளவிலான விவசாயிகள் தெரிவிக்கின்றார்கள்.

எனவே, விவசாயிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்த பின்னர், விவசாயிகளிடம் இருந்து தேவையான நெல்லை கொள்வனவு செய்வது பொருத்தமாக இருக்கும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.