இலங்கையில் பயிற்சிபெற்ற பணியாளர்களை ஜப்பானில் பணியில் ஈடுபடுத்துவதற்கு ஆர்வமாக உள்ளதாக புதிய ஜப்பான் தூதுவர் கௌரவ பிரதமரிடம் உறுதி.

இலங்கையில் பயிற்சிபெற்ற பணியாளர்களை பணியில் ஈடுபடுத்துவதற்கு ஜப்பான் அரசாங்கம் ஆர்வமாக உள்ளதாக இலங்கைக்கான புதிய ஜப்பான் தூதுவராக அண்மையில் கடமைகளை பொறுப்பேற்ற மிசிகொஷி ஹெதெகி (Mizukoshi Hideaki) அவர்கள் இன்று (09) அலரி மாளிகையில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்த போது தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளில் குறைந்த திறன் மற்றும்; நிபுணத்துவம் கொண்ட பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பாக இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையே இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

வெளியுறவுத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அவர்கள்  தெரிவிக்கும் வகையில் முறையான பயிற்சி பெற்ற பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையிலிருந்து ஜப்பானுக்கு 14 துறைகளின் கீழ் பணியாளர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

தமது பதவிக்காலத்திற்குள் இந்நாட்டின் முதலீட்டை மேம்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்துவதற்கு ஆர்வமாக உள்ளதாக  மிசிகொஷி ஹெதெகி அவர்கள் தெரிவித்தார். இதுவரை இலங்கையில் 75 ஜப்பானிய முதலீட்டு நிறுவனங்கள் செயற்பட்டு வருகின்றன.

கடந்த 15 ஆண்டு காலப்பகுதிக்குள் சுமார் 382 மில்லியன் ஜப்பானிய டொலர் முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதனூடாக 12,000 இற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஜப்பான் அரசாங்கத்தின் பங்களிப்புடன் அண்மையில் திறக்கப்பட்ட பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புதிய விமான ஓடுதளம் மற்றும் ஓடுபாதை, கல்யாணி பொன் நுழைவாயில் மற்றும் கண்டி நகர கழிவுநீர் முகாமைத்துவ திட்டம் என்பன தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.