மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களில் தற்காலிக, அமைய அடிப்படையில் கடமை புரியும் ஊழியர்கள் பா.உ கோ.கருணாகரம் ஜனா அவர்களைச் சந்தித்தனர்…

சுமன்)

மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களில் தற்காலிக, அமைய அடிப்படையில் கடமை புரியும் ஊழியர்கள் தங்கள் நியமனங்களை நிரந்தரமாக்கக் கோரி மட்டக்களப்பு மாவட்ட பாராளுன்ற உறுப்பினர்களைச் சந்தித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஜனா அவர்களைச் சந்தித்து தங்கள் கோரிக்கை தொடர்பிலும் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பிலும் கலந்துரையாடலொன்றினை மேற்கொண்டிருந்தனர்.

இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் உட்பட மண்முனை தென்எருவில் பற்றுப் பிரதேசசபைத் தவிசாளர் புஸ்பலிங்கம், போரதீவுப் பற்றுப் பிரதேசசபைத் தவிசாளர் ரஜனி, முன்னாள் கிழக்கு மாகாணசபை பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

உள்ளுராட்சி மன்றங்களில் தற்காலிக, அமைய அடிப்படையில் கடமை புரியும் ஊழியர்களினால் ஒழுங்கமைக்கப்பட்ட சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க பிரதேச சபைத் தவிசாளர்களான புஸ்பலிங்கம் மற்றும் ரஜனி ஆகியோரின் ஏற்பாட்டில் இக்கலந்துரையாடல் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.

அந்த அடிப்படையில் 2015ம் ஆண்டு தற்காலிக அமைய அடிப்படையில் இணைத்துக்கொள்ளப்பட்ட ஊழியர்கள் இன்னமும் தங்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை. இது தொடர்பில் அண்மையில் தாங்கள் கவனயீர்ப்புப் போராட்டமொன்றினை மெற்கொண்டு தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியதோடு, உருக்கமான வேண்டுகோளினையும் விடுத்தாகவும் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து அவர்களுடாக நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடும் முகமாக இச்சந்திப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

இதன் போது பாராளுமன்ற உறப்பினர் தெரிவிக்கையில்,

கட்சி பேதங்களுக்கப்பால் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கைளயும் ஒன்று சேர்த்து ஊழியர்களின் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடி எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமோ அத்தனை நடவடிக்கைகளுக்கும் தாம் ஆதரவு வழங்குவதாகவும், எப்போதும் ஊழியர்களின் நியமனத்தை நிரந்தரமாக்கும் விடயத்தில் தங்களுக்கான ஒத்துழைப்புகளை வழங்கத் தயாராக உள்ளதாகவும், இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் மத்திய அமைச்சுகளுடன் கலந்துரையாடுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.