அரசுக்குள் இருந்து கொண்டுஅழுத்தங்களை பிரயோகிக்காமால், வீதியில் இறங்கி நாடகமாடுகின்றனர் – எம்.பி. உதயகுமார் கருத்து

(க.கிஷாந்தன்)

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுத்துவிட்டோம் என்கூறி இ.தொ.காவினரே பட்டாசு கொளுத்தி, பாற்சோறு சமைத்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.  இன்று ஆயிரம் ரூபா கிடைக்கவில்லை என போராடுகின்றனர். அரசுக்குள் இருந்துகொண்டு அழுத்தங்களை பிரயோகிக்காமால், வீதியில் இறங்கி நாடகமாடுகின்றனர் – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்தார்.

தற்கால அரசியல்,  தோட்ட தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதேச மட்ட முக்கியஸ்தர்கள், மாவட்ட தலைவர்கள், அமைப்பாளர்கள், இளைஞர் அணியினர், மகளிர் அணியினரின் கருத்துகளை பெற்று தெளிப்படுத்தும் கூட்டம் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்தின் ஆலோசனைக்கு ஏற்ப அட்டன் அஜந்தா விருந்தகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (14.12.2021) இடம்பெற்றது.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் பிரதி நிதி செயலாளரும், மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன், கட்சியின் பொது செயலாளர் எஸ்.பிலிப், கட்சிய முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

” நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, நெருக்கடியான சூழ்நிலை உருவாகியுள்ளது. இன்னும் 3 மாதங்களுக்குள் இந்நிலைமை மேலும் மோசமாகும். எனவே, தனது இயலாமையை ஏற்றுக்கொண்டு ஆட்சியை கைவிட்டு, இந்த அரசு செல்ல வேண்டும்.

நாட்டிலே ஜனநாயகம் இல்லை. அராஜக ஆட்சியை முன்னெடுப்பதற்கான முனைப்புகளே இடம்பெறுகின்றன.  மக்கள் பிரதிநிதிகளுக்குகூட பாதுகாப்பு இல்லை. ஆளுங்கட்சியில் உள்ள பங்காளிக்கட்சி உறுப்பினர்களே தாக்கப்படும் நிலைமை காணப்படுகின்றது. எனவே, ஆளுங்கட்சிமூலம்தான் இந்த அரசுகூட கவிழ்க்கப்படும் என்பதை கூறிவைக்க விரும்புகின்றேன்.

நாட்டில் பல பிரச்சினைகள் தாண்டவமாடும் நிலையில் ஜனாதிபதி வெளிநாடு சென்றுள்ளார். நிதி அமைச்சரும் அமெரிக்கா செல்கின்றார்.

அதேவேளை, சம்பள நிர்ணய சபை ஊடாக தீர்மானம் எட்டப்பட்டு வர்த்தமானி மூலம் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு உறுதிப்படுத்தப்பட்டது. பட்டாசு கொளுத்தி, பாற்சோறு சமைத்து இதனை காங்கிரஸினர் கொண்டாடினர்.  வர்த்தமானி மூலம் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை. அதற்கான அழுத்தங்களை அரசில் இருப்பவர்கள் பிரயோகிக்க வேண்டும். அதனைவிடுத்து தற்போது போராட்டங்களை நடத்துவது நாடகமாகும்.”- என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.