கேஸ் பிரச்சினை தொடர்பில் கேஸ் நிறுவன தலைவர்களும் அதிகாரிகளும் மக்களுக்கு உடனடியாக பதில் வழங்க வேண்டும் – ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

செய்தி ஆசிரியர்,
 
கேஸ் பிரச்சினை தொடர்பில்  கேஸ் நிறுவன தலைவர்களும்  அதிகாரிகளும்  மக்களுக்கு உடனடியாக பதில் வழங்க வேண்டும் –  ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ
கொழும்பு- ஹொரன வீதியில்  9/2 இலக்க வெரஹர பாலம் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நெடுஞ்சாலை அமைச்சரும் ஆளும தரப்பு பிரதம கொறடாவுமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ மற்றும் அமைச்சர் காமினி லொகுகே ஆகியோரின்  தலைமையில்  வெரஹரவில் நடைபெற்றது.
வெரஹர பாலம் நிர்மாணிப்பதற்காக  285 மில்லியன் ரூபா செலவிடப்படுகிறது. 43.3 மீட்டர்கள் வரை பாலம் விஸ்தரிக்கப்படுவதோடு 22 மீட்டர் அகலமும் 4 வழிப்பாதையும் கொண்டதாக இது நிர்மாணிக்கப்படும். 15 மாதங்களில் நிர்மாணப்பணிகள் நிறைவடைய இருப்பதோடு  இந்தப் பாலம் நிர்மாணிக்கப்படுவதோடு பொரலஸ்கமுவ வௌ்ள அச்சுறுத்தல் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விழாவின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஜோன்ஸ்டன பெர்ணான்டோ,
கேஸ் பிரச்சினை தொடர்பில்  கேஸ் நிறுவன தலைவர்களும்  அதிகாரிகளும்  மக்களுக்கு உடனடியாக பதில் வழங்க வேண்டும். தலைவர்களை தொலைபேசியூடாக கூட தொடர்பு கொள்ள முடியாதிருப்பதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். மறைந்திருக்க வேண்டிய தேவை கிடையாது. அரசாங்கத்தை அபகீர்த்திக்குட்படுத்தாமல்  மக்களுக்கு பதில் வழங்க வேண்டும். அத்தோடு இந்த கேஸ் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும்.ஒரு கம்பனி தலைவர் ஊழல் மோசடி பற்றி பேசுவதை கண்டேன். ஆனால் கேஸ் பிரச்சினை வரும் போது தலைறைவாகிறார். மறைந்திருப்பதற்காக ஜனாதிபதி அவருக்கு பதவி வழங்கவில்லை. பிரச்சினைகள் இல்லாத போது கருத்துக் கூறுவதை விடுத்து அரசாங்கத்தை அபகீர்த்திக்குள்ளாக்காமல்  பிரச்சினைகளை மட்டுப்படுத்துவதற்கான தீர்வுகளை  வழங்க வேண்டும் என்றார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,
பாராளுமன்ற கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டு வந்தது தவறு என எதிர்த்தரப்பு பிரதம கொறடா கிரியெல்ல கூறியுள்ளார். அரசியல் நெருக்கடி நிலையில் ஒத்திவைத்தது தவறாம். நாட்டில் எத்தகைய அரசியல் நெருக்கடி நிலை உள்ளது என்று கேள்கிறேன். 1947 இல் இருந்து 50 தடவைகள் கூட்டத் தொடர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இது புதிய விடயமல்ல. சஜித் பிரேமதாஸவின் தந்தை கூட நம்பிக்கையில்லா பிரேரணையின் போது கூட்டத் தொடரை முடிவுருத்தியுள்ளார். பாராளுமன்றம் ஜனவரி 11 ஆம் திகதி கூட இருந்தது. மேலும் 6 நாட்கள் காத்திருக்க முடியாதா?கொவிட் காலத்தில் ஒத்துழைப்பு வழங்காத உலகில் ஒரே ஒரு எதிர்க்கட்சி எமது நாட்டிலே உள்ளது. பாராளுமன்றம் கூடிய பின்னர் இவர்கள் எமக்கு ஆலோசனை தருவார்களா? சந்திரிகா,பிரேமதாஸ, மஹிந்த ராஜபக்‌ஷ, ஜே.ஆர் ஜெயவர்தன என அனைவரும் இவ்வாறு ஒத்திவைத்துள்ளனர்.புதிய விடயமல்ல. தொங்குவதற்கு கயிறு இல்லாத எதிரணி முதலைக்கண்ணீர் வடிக்கிறது. நாட்டில் டொலர் நெருக்கடி இருக்கிறது. ஆனால் மக்களை அசௌகரியத்தில் தள்ள மாட்டோம் என்பதை பொறுப்புடன் தெரிவிக்கிறோம். செயற்திட்டமொன்று இருந்தால் முன்வைக்குமாறு எதிரணிக்கு சவால் விடுகிறேன் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.