அரசியலுக்கப்பால் நான் இல்லாவிட்டாலும் இலவச அமரர் ஊர்தி சேவை எமது மக்களுக்காகத் தொடரும்… (ஜி.கே அறக்கட்டளையின் தலைவர் – பா.உ கோ.கருணாகரம் ஜனா

ஜி.கே அறக்கட்டளையின் இலவச அமரர் ஊர்தி சேவை அரசியலுக்காக ஆரம்பிக்கப்பட்டதல்ல சில காரணங்களினால் தடைப்பட்டதே தவிர நிறுத்தப்படவில்லை. என் அரசியல் முடிவுற்றாலும், நான் இல்லாவிட்டாலும் இச்சேவை எமது மக்களுக்காகத் தொடரும் என ஜி.கே அறக்கட்டளையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.

ஜி.கே அறக்கட்டளையின் இலவச அமரர் ஊர்தி சேவையின் செயற்பாடு மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலான ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 2017ம் ஆண்டு எங்களது ஜி.கே அறக்கட்டளையூடாக ஆரம்பிக்கப்பட்ட இலவச அமரர் ஊர்தி சேவை தொடர்ச்சியாக 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரைக்கும் தனது சேவையைத் தொடர்ந்து சென்றது. சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட சடலங்களை ஏற்றியுள்ளோம்.

மாநகரசபை வளாகத்தினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எமது அமரர் ஊர்தி சேதமாக்கப்பட்டதைத் தொடர்ந்து சில சட்டப் பிரச்சனைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதன் பிற்பாடு அந்த ஊர்தி மீண்டும் புனரமைக்கப்பட்டு அந்தத் தடைகளெல்லாம் நீக்கப்பட்டு இன்று மீண்டும் மக்களின் சேவைக்காகத் தொடங்கப்படுகின்றது.

உண்மையில் இந்த இலவசச அமரர் ஊர்தி சேவையை நாங்கள் அரசியலுக்கு அப்பால் மனிதாபிமான ரீதியில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் எமது மாகாண மக்களுக்காகத் தொடங்கியிருந்தோம். அதனூடாக ஆயிரக் கணக்கானோர் பயன்பெற்றிருந்தார்கள்.

இருந்தும் இந்த அமரர் ஊர்தி சேவை தடைப்பட்டிருந்த காலத்தில் நாங்கள் இந்த அமரர் ஊர்தி சேவையை அரசியலுக்காகத் தான் தொடங்கினோம், பாராளுமன்றத் தேர்தலில் வெல்ல வேண்டும் என்பதற்காகத் தான் தொடங்கினோம், தேர்தல் முடிந்து விட்டது அதனால் இந்த சேவையும் முடிந்து விட்டதெனப் பலரும் கூறியிருந்தாhகள்.

உண்மையில் அரசியலுக்கு அப்பால் தேர்தலுக்காக அல்லாமல் எனது பாராளுமன்றக் காலம் முடிந்த பிற்பாடும் எமது நிருவாகத்திலே இருக்கும் அத்தனை பேரும் இணைந்து எவர் ஒருவர் இல்லாவிட்டாலும், எனக்கே ஏதும் நடந்தால் கூட இந்த இலவச அமரர் ஊர்தி சேவை தொடரும். இது வசைபாடியவர்களுக்கும், இந்தச் சேவையின் மகத்துவத்தைப் புரிந்துகொண்டவர்களுக்குமான அறிவித்தல்.

இந்தச் சேவை தேவைப்படுபவர்கள் இன்றிலிருந்து இதில் குறிப்பிடப்பட்டுள்ள 0766060299 என்ற இலக்கத்தைத் தொடர்பு கொண்டு இந்தச் சேவையைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதை மட்டக்களப்பு மாவட்டம் மாத்திரமல்லாமல் கிழக்கு மாகாண மக்களுக்கும் இத்தால் அறியத்தருகின்றோம் என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.