பல் முனை நெருக்கடியில் உள்ள நாட்டினை மீட்க ஊடகங்களால் முடியும்-அங்கஜன் எம்.பி நம்பிக்கை.

சாவகச்சேரி நிருபர்
பல நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து வரும் நாட்டினை நெருக்கடியில் இருந்து மீட்க ஊடகங்களால் முடியும் எனப் பாராளுமன்ற உறுப்பினரும்,யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட செயல கேட்போர் கூடத்தில் 18/02 வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.இது தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்;
அரசாங்க வெளியீட்டுப் பணியகம் யாழ்ப்பாண மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.இது இங்குள்ள மக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அரச தகவல்களை பெறுவதற்குரிய சிறந்த வாய்ப்பு.அரச வெளியீட்டு பணியகத்தை திறந்து வைக்க மாத்திரமன்றி இங்குள்ள ஊடகவியலாளர்களின் பிரச்சனைகள் தொடர்பாக ஆராயவும் ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும வருகை தந்திருந்தது மிகப்பெரிய விடயம்.
இங்கு வருகை தந்திருந்த ஊடகவியலாளர்கள் கறுப்பு பட்டியினை அணிந்து தமது கவலை/கண்டனத்தை வெளியிட்டிருந்ததனை அவதானித்திருந்தோம். கடந்த காலத்தில் ஊடகத் தொழிற்துறை சார்ந்தவர்களின் இழப்பு மற்றும் அதற்கு கிடைக்கப்பெறாத நீதி சார்ந்தே அவர்கள் இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளனர் என்பதனை உணர்ந்து கொள்கிறேன்.ஊடகவியலாளர்கள் கோரும் விடயம் நியாயபூர்வமானது. அவர்களுடைய அந்த எதிர்பார்ப்பு நடைபெற வேண்டும்.அதனூடாக எதிர்காலத்தில் இதுபோன்ற அச்சுறுத்தலான நிலைமை இன்றி ஊடகர்கள் பணியாற்றிய முடியும்.இன்று காலம் மாறிவிட்டது.ஜனநாயக ரீதியான பல முன்னெடுப்புக்கள் நடந்து கொண்டு இருக்கின்றன.அன்றைய அமைச்சர்கள் எப்படி இருந்தார்களோ தெரியவில்லை.ஆனால் இன்றுள்ள அமைச்சர்கள் சிறந்த ஜனநாயக முறையிலான நாட்டினை கட்டியெழுப்பி வருகின்றனர்.இன்று கூட தமிழுக்கு முதலிடம் வழங்குமாறு ஊடக அமைச்சர் தொகுப்பாளர்களிடம் அறிவுறுத்தியிருந்ததனை கண்ணூடாக பார்த்திருந்தேன்.
எமது
ஊடகவியலாளர்கள் பல இழப்புக்கள்-அச்சுறுத்தல்களைத் தாண்டி சேவையாற்றி வருகின்றனர்.கடந்த கொரோனா அச்ச நிலைமையில் கூட பலரும் வீட்டில் முங்கியிருக்க ஊடகவியலாளர்கள் அன்றாடத் தரவுகளை/நிலைமைகளை மிகத் துல்லியமாக வழங்கி வந்தனர்.
எமது மாவட்டத்தில் பல ஊடகங்கள்,ஊடகவியலாளர்கள் உள்ள போதிலும் அவர்களுக்கான ஊதியம் போதுமானதாக இல்லை.ஊடகர்கள் சகல வசதி வாய்ப்புக்கள்,சலுகைகளையும் பெற வேண்டும்.இங்கு குடியிருக்க சொந்த வீடு கூட இல்லாத ஊடகவியலாளர்கள் பலர் உள்ளனர்.வீட்டுத்திட்டங்களில் இவ்வாறான ஊடகவியலாளர்களுக்கு முன்னுரிமை வழங்க அரசாங்க அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சில ஊடகங்கள் அச்ச உணர்வினை ஏற்படுத்தி வருகின்றன.அதனை பார்க்கும் மக்கள் மனநிலை வேறு நிலையில் காணப்படுகிறது.மக்கள் மத்தியில் எதிரான கருத்துக்களை மட்டும் விதைக்காமல் நேர் சிந்தனைகளையும் விதைக்க ஊடகங்கள் முன்வர வேண்டும்.
எனக்கு முன்னர் உரையாற்றிய பலரும் ஊடகங்களின் திறன் மற்றும் அதிகாரம் பற்றி பேசி இருந்தனர்.ஊடகவியலாளர்கள் நினைத்தால் ஒன்றை ஆக்கவும் முடியும் அதே போன்று அழிக்கவும் இயலும்.பல இழப்புக்களையும் தாண்டி இன்று செங்கல் செங்கல்லாக எமது வாழ்க்கையை கட்டியெழுப்பி வருகிறோம்.இந் நிலையில் அடுத்த தலைமுறை சரியான பாதையில் பயணிப்பதற்கான வழிகாட்டியாக ஊடகங்கள் அமைய வேண்டும்.
இங்குள்ள பல ஊடகங்களை யார் இயக்குகிறார்கள் என்பது கூடத் தெரியாத நிலை காணப்படுகிறது.எதிர்காலத்தில் சமூகவலைத்தளங்களை ஓர் வரையறைக்குள் கொண்டு வந்து அவற்றுக்கான அங்கீகாரத்தை பெற்றுக்கொடுக்க ஊடக அமைச்சர் முன்வர வேண்டும்.ஊடகவியலாளர்களும் அதனை வரவேற்பார்கள் என நம்புகிறேன்.
தற்போது நாடு பல முனைகளிலும் சவால்களை எதிர்கொண்டு வருகிறது.அதில் பொருளாதார பிரச்சனை முக்கியமானதொரு பிரச்சனையாக உள்ளது.ஊடகங்கள் பிரச்சனைகளை மட்டும் வெளிகொண்டு வராமல் இங்கு முன்னெடுக்கப்படுகின்ற நலத் திட்டங்கள் தொடர்பிலும் தகவல்களை வெளிக் கொண்டு வரும் பட்சத்தில் அதைப் பார்வையிடும் வெளிநாட்டவர்கள் இங்கு வருகை தந்து முதலீடுகளை மேற்கொள்வதன் மூலம் பொருளாதார நெருக்கடிகளை குறைக்க முடியும்.என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.