மட்டக்களப்பு மாநகரசபையின் 58வது சபை அமர்வு… சுகாதாரக் குழுவினால் ஆணையாளருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பிரேரணை விவாதத்தின்போது அமளிதுமளி…

(சுமன்)

மட்டக்களப்பு மாநகரசபையின் 58வது சபை அமர்வு இன்றைய தினம் சபை முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன் உள்ளிட்ட மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் பதில் செயலாளர், கணக்காளர் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது பல்வேறு செயற்திட்டங்கள் தொடர்பிலான முன்மொழிவுகளுக்கான அங்கீகாரங்கள் பெறப்பட்டதுடன், பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

விசேடமாக இன்றைய அமர்வின் ஆரம்பத்தில் தற்போது நிலவும் மின்சாரத்தடைக்கு எதிர்ப்பு வெளியிடும் முகமாக மாநகரசபை உறுப்பினர்கள் சிலரினால் மெழுகுவாத்தி ஏந்தி சபை அமர்வில் கலந்துகொண்டிருந்தனர்.

அத்துடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாநகர ஆணையாளர் ஊழியர்களை தன் சுய வேலைக்காகப் பயன்படுத்தியமை தொடர்பில் மாநகரசபையின் சுகாதாரக் குழுவின் தலைவரால் மாநகர ஆணையாளர் சுகாதாரத் தொழிலாளர்களையும், மேற்பார்வையாளர்களையும் தன் சுய தேவைக்குப் பயன்படுத்துவதாகவும் அதற்கு ஒத்துழைக்காதவர்களுக்கு இடமாற்றம் வழங்குவதும், அவர்களைப் பழிவாங்கும் செயற்பாடுகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்து மாநகர ஆணையாருடன் தொடர்ந்து சேவையாற்ற முடியாது எனவும், அவரை மாற்றம் செய்யுமாறும் கோரி பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டது.

முன்வைத்த பிரேரணை தொடர்பில் உறுப்பினர்கள் மத்தியில் பலத்த வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று சில நிமிடங்கள் சபையில் அமளிதுமளி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மாநகர முதல்வரினால் சபை அமைதியடையச் செய்யப்பட்டு குறித்த பிரேரணை நிறைவேற்றத்திற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றது.

இவ்வாக்கெடுப்பில் 24 உறுப்பினர்கள் இப்பிரேரணைக்கு ஆதரவாகவும், 09 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். ஏனையோர் வாக்கெடுப்பில் பங்கெடுக்காமலும் நடுநிலையாகவும் செயற்பட்டனர். இதன்படி குறித்த பிரேரணையானது 15 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.