பெண்களின் அடக்குமுறைக்கெதிராக ஆண்களும் குரல் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கின்றது-அப்துல் அஸீஸ்

இளைஞர்களைவிட அனேகமான இன்று  யுவதிகளுக்கு அரச துறையில் வேலை வாய்ப்புக் கிடைத்துள்ளது. இன்றைய பொருளாதார நெருக்கடியினால் வாழ்க்கைச் செலவுகள் அதிகம் என்பதால் கூடுதலான வருமானங்களை பெற வேண்டும் என்பதற்காக எமது நாட்டிலுள்ள இளைஞர்கள் அரச துறையில் ஆர்வம் காட்டாமல் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்கு சென்று வருகின்றனர். பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள், பல்துறைகளில் நியமனம் பெற்று அரசஇ தனியார் துறைகளில் வேலை செய்பவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களே. இதன் காரணமாக பெண்களுக்கு ஏற்படும் தொந்தரவுகள் மற்றும் இம்சைகளால் எத்தனையோ பெண்கள் உளரீதியாக பாதிக்கப்பட்டு வெளியில் கூற முடியாமல் வேதனைகளை அனுபவித்து வருகின்றனர். இன்று எத்தனையோ குடும்பங்கள் விவாகரத்திற்காக நீதிமன்றங்களில் காத்து நிற்கிறது. இதற்கு அடிப்படைக் காரணம் போதைப் பொருள் பாவனை என தரவுகள் கூறுகிறது. எனவே கணவனின் போதையினால்இ பேதைகளின் வாழ்வு வெகுவாகப் பாதிக்கப்படுகிறது என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.

சர்வதேச மகளீர் தினத்தினை முன்னிட்டு  கல்முனை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘நிலைபேறான எதிர்காலத்திற்கு இன்றே பால்நிலை சமத்துவத்திற்காக பாடுபடுவோம்’ எனும் தொனிப் பொருளிலான மகளிர் தின நிகழ்வில் செவ்வாய்க்கிழமை(8) இன்று   தலைமைதாங்கி கருத்துரை வழங்கிய வேளை மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

பாலியல் தொந்தரவானது பாரபட்சத்தின் ஒர் அம்சமாக இருக்கின்றது.  இலங்கையில் பாலியல் தொந்தரவானது குற்றவியல் குற்றமாகவே கருதப்படுகின்றது.  தகாத பாலியல் நோக்குடனான நடத்தை, உடலியல் ரீதியான தொடுகையும் அதற்கு மேலானவையும், பாலியல் சாயமூட்டப்பட்ட குறிப்புக்கள், ஆபாச படங்களை காண்பித்தல், வார்த்தைகளாகவோ அல்லது செய்கையாலான பாலியல் கோரிக்கை போன்றவற்றை பாலியல் தொந்தரவு உள்ளடக்குகின்றது.  இவ்வாறான நடத்தை சுயமரியாதையை காயப்படுத்துவதுடன் உடல் நலம் மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகளையும் தோற்றிவிக்கலாம்.
மேலும் தொந்தரவுக்கு ஆளானவர்களுக்கு ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு போன்ற விடயங்களில் தாக்கம் ஏற்படும் என்ற நியாயமான அடிப்படை எழலாம் அதேவேளை பாரபட்சத்திற்கும் இட்டுச்செல்லக்கூடியதாக இருப்பதுடன் வேலைத்தளத்தில் அசௌகரியமான சூழல் தோன்றவும் வாய்ப்பு இருக்கும்.
பெண்களுக்கு  எதிரான வன்முறைகள், அநீதிகள் பரவலாக இடம்பெற்று வருகின்றது. அவற்றிக்கெதிராக விழிப்புணர்வு தேவை. இவற்றிற்கு சவால் விடுதல் போன்றவற்றில் பெண்கள் அமைப்புக்கள்  மிகத் தெளிவான முன்னேற்றத்தை பெற்றிருந்தாலும் இது பாதிப்புக்குள்ளாகி வருகின்ற பெண்களிடம் சென்றடையவில்லை என்பது பெரும் குறையாக இருக்கின்றது. பெண்களின் அடக்குமுறைக்கெதிராக ஆண்களும்  குரல் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கின்றது என  தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது பெண் அமைப்பின் பிரதிநிதிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.