எமது நாட்டின் தீர்மானிக்கும் ஆற்றல் மிக்கவர்களாக பெண்கள் காணப்படுகின்றனர் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

எமது நாட்டின் தீர்மானிக்கும் ஆற்றலுள்ளவர்களாக பெண்கள் காணப்படுகின்றனர் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி மண்டபத்தில் இன்று (08) காலை நடைபெற்ற 2022  சர்வதேச மகளிர் தின கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் இவ்வருட சர்வதேச மகளிர் தின தேசிய நிகழ்வு இடம்பெற்றது.

துணிச்சலான பெண்களைப் பாராட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட பெண்களின் உற்பத்தி பொருள் கண்காட்சி மற்றும் விற்பனை நிலையத்தை கௌரவ பிரதமர் பார்வையிட்டார்.

சர்வதேச தரத்திற்கு ஏற்ப 10 சர்வதேச மொழிகளை பாடசாலை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் திட்டத்தையும் கௌரவ பிரதமர் இதன்போது ஆரம்பித்து வைத்தார்.

‘தியனிய’ வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவிகளுக்கு இலவச சுகாதாரப் பொருட்கள் விநியோகிக்கும் செயற்பாட்டின் இரண்டாம் கட்டம் பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் குறியீட்டு ரீதியாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.

நிகழ்வில் கௌரவ பிரதமர் ஆற்றிய உரை,

பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் இன்று நாம் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாட மறக்கவில்லை. நாம் மட்டுமின்றி உலகில் உள்ள பல நாடுகள் பல பாரதூரமான பிரச்சனைகளை எதிர்கொண்டாலும் இந்த சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாட மறக்கவில்லை. அது குறித்து நாம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.

இந்த சர்வதேச மகளிர் தினத்தில், நமது நாட்டிற்கும, எனது அரசியல் வாழ்விற்கும் சிறந்த முன்னுதாரணமாக விளங்கிய ஒரு பெண்மணியை நினைவுபடுத்த விரும்புகிறேன். அவர் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க. 1970ஆம் ஆண்டு இலங்கையின் இளம் நாடாளுமன்ற உறுப்பினராக நான் பாராளுமன்றம் சென்றபோது திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்களே எனது தலைவியாக விளங்கினார்.

அரசியலில் நான் கண்டிராத துணிச்சலான தலைவி அவர். அதேபோன்று நாட்டின் மீது அன்புடனும், தேச உணர்வுடனும் நாட்டை வழிநடத்திய தலைவியொருவர். இலங்கையில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட்டன. அந்த காலக்கட்டத்தில் அது ஒரு பெரிய துணிச்சலான நடவடிக்கை என்று கூறலாம். வெளிநாட்டு நிறுவனங்களுக்குச் சொந்தமான தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்டன. அத்துடன் நிறுத்தவில்லை.

அவர் தனது நாட்டை வளமாக்குவதற்கு நம் நாட்டின் உள்ளூர் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப துணிச்சலாக உழைத்தார். இலங்கையை விவசாயத்தில் தன்னிறைவு அடையச் செய்வதற்கும், உள்ளுர் கைத்தொழில்களை மேம்படுத்துவதற்கும் மிகுந்த உறுதியுடன் பாடுபட்ட தலைவி திருமதி சிறிமாவோ ஆவார். அதுதான் இலங்கையின் பெண்மை என்று நினைக்கிறேன்.

நாட்டை தன்னிறைவு அடையச் செய்ய உள்ளூர் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அயராது உழைத்தபோது, பல விமர்சனங்களையும் சவால்களையும் சந்திக்க வேண்டியிருந்தது. இன்று போன்று தான். உள்ளூர் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு மஞ்சள் செடியில் இருந்து எமக்கு தேவையானவற்றை நாமே உற்பத்தி செய்ய முயலும் போது பெரிய சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் எதிர்கொண்ட அனைத்து சவால்களுக்கும் பிரச்சினைகளுக்கும் நாமும் முகம் கொடுக்கின்றோம். நம் நாட்டில் பெண்கள் என்ன விரும்புகிறார்கள், நாட்டின் சுதந்திரத்தைப் பற்றி பெண்கள் எப்படி நினைக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்.

உலகமே ஏற்றுக்கொண்ட ஒரு விடயம் தான் பெண்களுக்குள்ள மிகப் பெரிய பிரச்சினை போர். போரினால் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

உக்ரைனும் ரஷ்யாவும் மோதிக் கொண்டாலும், அமெரிக்காவும், ஈராக்கும் மோதிக் கொண்டாலும் அதனால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே.

இலங்கையில் முப்பது வருடங்களாக இவ்வாறானதொரு அதிதீவிர நிலைமை நிலவியது. வடக்கில் சிறுமிகளை விடுதலை புலிகள் போருக்கு வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். போருக்குச் சென்றவர்களின் ஆயிரக்கணக்கான மனைவிகள் விதவைகள் ஆனார்கள். ஒவ்வொரு நாளும் வடக்கில் போரில் இறந்த ஒரு இளைஞனின் உடல் தெற்கில் எங்காவது ஒரு வீட்டிற்கு கொண்டு வரப்படும். வடக்கு, கிழக்கு எல்லைக் கிராமங்களில் ஆயிரக்கணக்கான பெண்கள் மரண பயத்தில் வாழ்ந்து வந்தனர்.

30 வருடங்களாக துன்பங்களை அனுபவித்த பெண்கள் யுத்தம் முடிவடைந்த போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். நம் நாட்டில் போரை முடிவுக்கு கொண்டு வந்தமையே பெண்களுக்கான  மிகப்பெரிய சேவையாகும் என்பதை மிகுந்த பெருமையுடன் கூற வேண்டும்.

ஆனால், ஈஸ்டர் தாக்குதலின் மூலம், நம் நாட்டுப் பெண்களுக்கு மீண்டும் அத்தகைய அச்சம் ஏற்பட்டது. எவ்வாறாயினும், பெண்களுக்கு மீண்டும் அவ்வாறான அச்சம் ஏற்படாத வகையில் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றே கூற வேண்டும்.

உலக அளவில் நம் நாட்டிலும் பெண்கள் அனைத்து துறைகளிலும் வேகமாக முன்னேறி வருவதை நாம் அறிவோம். நம் நாட்டிலும் பெண்கள் தீர்மானிக்கும் ஆற்றல் மிக்கவர்களாக மாறிவிட்டனர்.

கொரோனா நெருக்கடியால் பெண்கள் வெளிநாடு செல்வதை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தற்போதைய டொலர் நெருக்கடி பிரச்சினைக்கு அதுவும் ஒரு காரணம்.

ஆடை கைத்தொழில் மற்றும் தேயிலை இலைகளின் ஊடாக டொலர்களை இந்த நாட்டிற்கு கொண்டு வந்தவர்கள் பெண்கள். பெருந்தோட்டத்துறையில் நாம் சம்பளத்தை அதிகரிக்கின்ற போது அதிகளவு பயன்பெறுவது பெண்களே.

ஆடைத் தொழிற்சாலைகள் திறக்கப்பட்டால், பெண்கள் அதிக அளவில் பயனடைவார்கள். அது மாத்திரமன்றி இன்று பல்கலைக்கழகங்களில் பெண்களே அதிகளவில் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிகழ்வை தொடர்ந்து 08 பெண்கள் பாடசாலைகளையும் 02 கலவன் பாடசாலைகளையும் தேசிய பாடசாலைகளாக பிரகடனப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளேன். எமது கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் மகளிர் தினத்தை முன்னிட்டே இதனையும் செய்கின்றனர் என்பதை குறிப்பிட வேண்டும்.இந்த நாட்டில் பெண்களுக்கு சிறந்த கல்வியை வழங்கவே இவை அனைத்தும் செய்யப்படுகின்றன.

இன்று நாம் மிகவும் கடினமான சூழ்நிலையில் இருக்கிறோம் என்பதை ஒப்புக்கொள்கிறோம். நம் நாட்டில் மின்சாரம், டீசல், எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் போது பெண்கள் பாதிக்கப்படுவது நமக்குத் தெரியும்.அண்மையில் ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்னால் சென்ற பெண் ஒருவர் இது பற்றி உங்களுக்கு தெரியுமா எனக் கேட்டுள்ளார். எவரும் கூற வேண்டியதில்லை அவை ஜனாதிபதிக்கு தெரியும்.

இரண்டாவது கொரோனா அலையின் போது அக்குழுவினர் நாட்டை மூடுமாறு ஜனாதிபதியை கட்டாயப்படுத்தியது எனக்கு நினைவிருக்கிறது. அவ்வாறு மாதக்கணக்கில் மூடப்படும் போது நாடு பொருளாதாரப் படுகுழியில் விழும் என்பதை நாட்டை மூட நினைத்தவர்கள் அறிந்திருந்தார்கள்.

நாட்டை மூடி ஆடைத் தொழிற்சாலையை திறந்த போது அதனையும் மூடுமாறு அழுத்தம் கொடுத்தனர். நாடு மூடப்படும் போது மக்கள் அதிக துன்பங்களை அனுபவிக்க நேரிடும் என்று மக்களுக்கு கூறிவிட்டே ஜனாதிபதி நாட்டை மூடினார். ஆனால் இன்று அது உண்மையாகிவிட்டது. இன்றைக்கு நாடு மூடப்பட வேண்டும் என்று குரல் கொடுத்த எவரும் துன்பப்படும் உங்களுக்காக துணை நிற்க மாட்டார்கள்.

அது மட்டுமன்றி 2015ஆம் ஆண்டு எம்மை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அப்போது எட்டு வருடங்களில் நுரைச்சோலை உட்பட பல மின் உற்பத்தி நிலையங்களை கட்டி முடித்துவிட்டே வீட்டுக்கு சென்றிருந்தோம்.
எவ்வாறாயினும், நல்லாட்சி அரசாங்கம் 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒரு மெகாவோட்டை கூட தேசிய மின்கட்டமைப்பில் இணைக்கவில்லை. அப்படிப்பட்டவர்கள் இன்று மின்வெட்டுக்கு எதிராக தீபம் ஏற்றி பேரணி நடத்துகிறார்கள்.

இந்த சிரமங்களை மட்டுமல்ல, அதற்கான காரணங்களையும் புரிந்து கொள்ளுங்கள். இதை கட்சி பேதமின்றி சிந்திப்போம். இந்த இக்கட்டான நேரத்தில் பொறுமையாக செயல்படுவோம் என கௌரவ பிரதமர் குறிப்பிட்டார்.
குறித்த நிகழ்வில் கௌரவ அமைச்சர் டலஸ் அழகப்பெரும, கௌரவ இராஜாங்க அமைச்சர்களான பியல் நிசாந்த, சனத் நிசாந்த, விமலவீர திஸாநாயக்க, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், பல நாடுகளின் தூதுவர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள், அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.