விலைவாசி அதிகரிப்பு மக்களின் வாழ்க்கையை பாதாளத்திற்குள் தள்ளியுள்ளது-முன்னாள் எம்.பி சந்திரசேகரன்.

சாவகச்சேரி நிருபர்
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள விலைவாசி அதிகரிப்பு மக்களின் வாழ்வியலை வெகுவாகப் பாதித்து அவர்களை பாதாளத்திற்குள் தள்ளியிருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை எழுதுமட்டுவாழ் வடக்கில் சோஷலிச மகளிர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மகளிர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
எழுதுமட்டுவாழ் மக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.இங்கு பாடசாலைகள்,வைத்தியசாலைகள்,போக்குவரத்து என அனைத்துமே பலவீனமடைந்துள்ளது. மழை காலத்தில் எழுதுமட்டுவாழ் கிராமமே நீரில் மூழ்கி மக்களின் வாழ்வாதாரம் அனைத்தும் அழியும் நிலைமை வருடா வருடம் காணப்படுகின்றது.யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இந்தப் பிரதேசம் அதன் பின்னர் எந்தத் துறையிலும் அபிவிருத்தியடையவில்லை. இந்த இருண்ட யுகத்தில் இருந்து மீள வேண்டியவர்களாக நாம் காணப்படுகிறோம்.
நாட்டில் தற்போது இடி விழுந்தது போல் அனைத்து பொருட்களதும் விலைவாசி அதிகரித்துள்ளது.ஆனால் எமது மக்களின் வாழ்வாதாரம் சற்றேனும் அதிகரிக்கவில்லை.
குறைவான விலைவாசி இருந்த காலத்தில் கூட கஸ்ரப்பட்ட எமது மக்கள் தற்போது இந்த விலைவாசி அதிகரிப்பால் வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.இந்த விலையேற்றம் மக்களை பாதாளத்திற்குள் தள்ளிவிட்டுள்ளது.
மக்களது வாழ்வியல் இவ்வாறு கீழ் நோக்கி செல்லும் போது பணக்காரர்களதும், அரசியல்வாதிகளதும் வாழ்க்கை மேலோங்கிக் கொண்டே செல்கிறது.அவர்கள் ஜெற் விமானத்தில் திருப்பதி செல்கிறார்கள்.
கோடிக்கணக்கில் பணம் கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள்.
அவ்வாறு கொள்ளையடித்த பணம் அனைத்துமே மக்களின் பணங்கள்.
சகல பொருட்களுக்கும் வரியை அறவிட்டு அதனூடாக திறைசேரிக்கு வருமானம் கிடைக்கிறது.இன்று சீனி வாங்கினால் கூட அதில் 15ரூபாய் அரசாங்கத்திற்கு வரியாக கொடுக்கிறோம். இவ்வாறு செலுத்தப்படும் வரிகளுக்கு என்ன நடக்கிறது?, யார் அதனை கொள்ளையடிக்கிறார்கள் என்று ஆராய வேண்டிய காலகட்டத்தில் வாழ்ந்து வருகிறோம். நாட்டினை 74வருடங்களாக ஆண்டவர்கள் தங்களது மடியை நிரப்பி,தமது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி தமது வாழ்க்கையை செழிப்பாக்கினார்களே தவிர மக்களது வாழ்க்கையை செழிப்பாக்கவில்லை. அவர்கள் தாம் நோய்வாய்ப்பட்டால் சிங்கப்பூர் சென்று எலிசபெத் என்ற வைத்தியசாலையில் சுகம் பெறுகிறார்கள்.ஆனால் இங்கு மக்கள் வைத்தியசாலைக்கு செல்வதற்கான பாதை கூட உரிய நிலையில் இல்லை.ராஜபக்சக்களுக்கும், ரணில் விக்கிரமசிங்கவிற்கும்,இங்குள்ள பெரிய அரசியல் வாதிகளுக்கும் பசி என்றால் என்ன?,நுளம்புக் கடி என்றால் என்ன என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இந்த நிலையில் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை ஒன்று ஏற்பட்டுள்ளது.
ஆட்சி அதிகாரத்தை ஏற்படுத்தும் வாக்கு பலம் பெண்களிடம் அதிகம் உள்ளது.அந்த வாக்கு பலத்தை சரியாகப் பயன்படுத்த வேண்டும்.இதுவரை அதனை சரியாகப் பயன்படுத்தவில்லை.எங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையை சூனியமாக்கும் வாக்குகளாக எமது வாக்கு இருக்கக்கூடாது.என மேலும் தெரிவித்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.