நாட்டின் பொருளாதார நிலையை கவனத்தில் கொண்டு தேவையற்ற செயலணிகளை கலைத்து விட கோரிக்கை……
நாட்டின் பொருளாதார நிலையை கவனத்தில் கொண்டு தேவையற்ற செயலணிகளை கலைத்து விட கோரிக்கை.
நூருள் ஹுதா உமர்.
நாடு எதிர் நோக்கும் பாரிய பொருளாதார நெருக்கடியில் ஒரே நாடு ஒரே செயலணி, தொல்பொருள் செயலணி போன்ற அவசியமற்ற செயலணிகளை கலைத்துவிட வேண்டும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சி (உலமா கட்சி) தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது, ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி அமைத்ததன் மூலம் நாட்டில் தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கிய ஞானசார தேரரை வேறு சூழலுக்குள் தள்ளி அவரது வாய் மூடப்பட்டது என்பது உண்மை. அச்செயலணி ஜனாதிபதி செயலகத்தில் மட்டும் இருந்து கொண்டு அறிக்கை தயாரிப்பர் என்றே நாம் நினைத்தோம்.
ஆனால் பின்னர் அச்செயலணியை வைத்துக்கொண்டு அவரும் அதன் உறுப்பினர்களும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ததன் மூலம் அரச நிதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டது மட்டுமின்றி இனங்களுக்கிடையில் சந்தேகங்களையும் உருவாக்கியது.
நாட்டின் குற்றவியல் சட்டம், சிவில் சட்டம் என பெரும்பாலான சட்டங்கள் அனைவருக்கும் பொதுவாகவே உள்ளன. திருமண சட்டம் மட்டுமே ஒவ்வொரு இனத்துக்கும் ஏற்ற வகையில் உள்ளன. இச்சட்டத்தால் இன்னொரு இனம் பாதிக்கப்படுவதில்லை. இப்போது ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஞானசார தேரரின் தியறி தோற்றுப்போனதாலும், இச்செயலணி அநாவசிய செலவுகளை ஏற்படுத்தியிருப்பதாலும் அச்செயலணியை கலைப்பதே நாட்டுக்கு நல்லது என்ற ஆலோசனையை எமது கட்சி முன் வைக்கிறது.
அதே போல் தொல் பொருள் செயலணியும் பிரயோசனமற்றது என்பதுடன் வீண் செலவுகளை ஏற்படுத்துவதுடன் இனங்களுக்கிடையில் மோதலை உண்டாக்குவதுமாகவும் உள்ளதால் இதுவும் கலைக்கப்படுவதே நாட்டின் எதிர்காலத்துக்கு சிறந்ததாகும் என்று தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை