சாவகச்சேரி வைத்தியசாலையில் இரு வாரத்திற்கு தேவையான மருந்துகளே கையிருப்பில் உள்ளது-வைத்தியர்கள் தகவல்.

சாவகச்சேரி நிருபர்
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இரண்டு வாரத்திற்கு தேவையான மருந்துகளே கையிருப்பில் இருப்பதால் அதன் பின்னர் வைத்தியசாலையை எப்படி கொண்டு நடத்தப்போகிறோம் என்ற அச்சம் நிலவுவதாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
08/04 சாவகச்சேரி வைத்தியசாலையில் பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர்கள் இதனைத் தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக மேலும் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்;
இலங்கையில் உள்ள சகல மக்களும் இடர்களை எதிர்கொள்ளும் இவ்வேளையில் மருத்துவத் துறையினரும் பெரும் சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
வைத்தியசாலையில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.சாவகச்சேரி வைத்தியசாலை அதிக மக்களுக்கு வைத்திய சேவை வழங்கி வருகிறது.இப்படியான தேவைப்பாடு மிக்க வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடு நிலவுவது பாரிய சிக்கல்களை ஏற்படுத்தும்.இரண்டு வாரங்களின் பின்னர் வைத்தியசாலையை எப்படி கொண்டு நடாத்தப் போகிறோம் என்ற அச்சம் காணப்படுகிறது.
குறிப்பாக குருதி அமுக்கம், நீரிழிவு உள்ளிட்ட நோய்களுக்கான மருந்துகள் வைத்தியசாலையில் குறைவாகவே காணப்படுகிறது.சில மருந்து வகைகள் தற்போதும் வைத்தியசாலையில் இல்லை.இந் நிலைக்கு விரைவாக தீர்வு காண வேண்டும்.
வைத்தியசாலையின் மேலாளர் மற்றும் உரிய மேலதிகாரிகளிடம் இது தொடர்பாக நாம் எடுத்துரைத்துள்ள போதிலும் உரிய நேரத்தில் தீர்வுகள் கிடைக்குமா என்ற சந்தேகம் நிலவுகிறது.மருந்து வகைகள் உரிய நேரத்தில் கிடைப்பதற்கு ஆவண செய்ய வேண்டும்.மருத்துவத் துறை எதிர் கொள்ளும் நெருக்கடியை பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.அத்துடன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் மின் தடை ஏற்படும் வேளைகளில் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகிறோம்.மின்பிறப்பாக்கி இருந்தும் அது அடிக்கடி தடைப்படுவதால் நோயாளர்களுக்கு சிகிட்சையளிப்பதில் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக வைத்தியர்கள் மேலும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.