கள்ள மண் கொள்ளையர்களின் உழவியந்திரத்தில் சிக்கி ஒருவர் படுகாயம்;பாலாவியில் சம்பவம்….
சாவகச்சேரி நிருபர்
*கள்ள மண் கொள்ளையர்களின் அடாவடியால் பொதுமக்கள் நடமாட முடியாத நிலை-பொதுமக்கள் அச்சம்.
கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலாவி தெற்கு ஜே/325 கிராம அலுவலர் பிரிவில் 18/04 திங்கட்கிழமை காலை கள்ள மண் ஏற்றிச் சென்ற உழவியந்திரம் மோதி நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
வேலி அடைத்துக் கொண்டு நின்ற நபர் ஒருவர் மீதே இவ்வாறு கள்ள மண் ஏற்றிச் சென்ற உழவியந்திரம் மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதில் பாலாவி தெற்குப் பகுதியைச் சேர்ந்த 40வயதான அ.சதானந்தன் என்பவரே உழவியந்திரத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
கள்ள மண் கொள்ளையர்களின் பொறுப்பற்ற நடவடிக்கை காரணமாக பொதுமக்கள் வீதிகளில் நடமாட முடியாத நிலை காணப்படும் அதேவேளையில்-அவர்களை எதிர்ப்பவர்களின் உடைமைகளை சேதப்படுத்தும் சம்பவங்களும் கடந்த காலங்களில் பாலாவி பகுதியில் இடம்பெற்றிருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை