மகேந்திரா வாகனம் மீது புகையிரதம் மோதி சிறுவன் பலி;தந்தையும்,சகோதரனும் படுகாயம்;பொதுமக்கள் கடும் எதிர்ப்பு.

சாவகச்சேரி நிருபர்
கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிருசுவில் பகுதியில் 22/04/2022 வெள்ளிக்கிழமை காலை 10.15 மணியளவில் இடம்பெற்ற ரயில் விபத்தில் மிருசுவில் தவசிகுளம் பகுதியைச் சேர்ந்த 9வயது சிறுவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன், சிறுவனது தந்தை மற்றும் சகோதரன் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.
மகேந்திரா வாகனத்தில் மிருசுவில் பிரதேச வைத்தியசாலை முன்பாக உள்ள புகையிரதக் கடவையை கடக்க முற்பட்ட வேளையில் யாழில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த புகையிரதம் மோதி இவ் அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது.உயிரிழந்த சிறுவனது சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள அதேவேளையில் படுகாயமடைந்த இருவரும் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த கடவையில் தொடர்ச்சியாக ரயில் விபத்துக்கள் நிகழ்ந்து பல உயிர்கள் காவு கொள்ளப்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கற்களை கொண்டு ரயில் பாதையை மூடி தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.இது தொடர்பாக சாவகச்சேரி பிரதேசசபை உபதவிசாளர் மயூரன் கருத்து தெரிவிக்கையில்;
குறித்த பகுதியில் பாதுகாப்பு கடவை அமைக்கப்பட வேண்டும் எனவும் அல்லது காவலாளி நியமிக்கப்பட வேண்டும் எனவும் நீண்ட காலமாக கோரி வருகிறோம்.பிரதேசசபையில்  இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி உரிய தரப்பிற்கு தெரியப்படுத்தியிருந்தும் இன்றுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.குறித்த கடவையில் சமிக்கை விளக்கு உள்ள போதிலும் அதை மறைக்கும் விதமாக மரம் ஒன்று காணப்படுகிறது.அதை அகற்ற கோரியும் நடவடிக்கை எதுவுமில்லை.தொடர்ச்சியாக இந்த ரயில் கடவையில் விபத்துக்கள் ஏற்பட்டு மனித உயிர்கள் காவு கொள்ளப்படுவதால் சினமடைந்த மக்கள் ரயில் பாதையில் கற்களை போட்டு தமது எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.குறித்த ரயில் கடவைக்கு காவலாளி நியமிக்கப்பட வேண்டும் அல்லது பாதுகாப்பு கடவை அமைக்க வேண்டும்.அதற்கான நடவடிக்கை எடுக்கும் வரை புகையிரதம் பயணிக்க மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.