போராட்டத்தை ஆதரிக்க தமிழர்களுக்கு யாரும் சொல்லித் தரத்தேவையில்லை-சிவசக்தி ஆனந்தன்

போராட்டம் ஒன்றை எப்படி எந்தச் சந்தர்ப்பத்தில் ஆதரிக்க வேண்டும் என்பது தொடர்பாகத் தமிழ் மக்களுக்கு யாரும் சொல்லிக் கொடுக்க தேவையில்லை என முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போது தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

கேள்வி-தற்கால அரசியல் நிலைமை தொடர்பாக உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்-கோட்டாபய ராஜபக்ச 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் திகதி ஜனாதிபதியாகப் பதவியேற்றபோது சிங்கள மக்களிடம் இருந்த எதிர்பார்ப்பு அடுத்த ஒரு ஆண்டுகளிலேயே குறைவடைய ஆரம்பித்துள்ளது. அதேபோன்று கடந்த ஆண்டு  ஓகஸ்ட் மாதம் பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராகவும் நிதியமைச்சராகவும் பதவியேற்றபோது, அரசாங்கத்தின் செல்வாக்கு உயருவது போன்றதொரு தோற்றப்பாடு தெரிந்தது.

ஆனால் அடுத்த சில மாதங்களிலேயே அரசாங்கத்தின் செல்வாக்குக் குறைய ஆரம்பித்ததுடன் சிறிலங்கா பொதுஜன பெரமுனக் கட்சி அரசாங்கத்துக்குள் முரண்பாடுகளும் மேலோங்கியது. 69 இலட்சம் சிங்கள மக்களுடைய வாக்குகளில்  கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்றிருந்தார். இவருடைய ஆட்சி நீடித்து நிலைக்க வாய்ப்பில்லை என்பது முற்போக்கான சிங்கள மக்களுக்கு ஏலவே தெரிந்த ஒன்று. தமிழ் மக்களுக்கும் அது ஏலவே தெரிந்ததுதான்.

கோட்டாபயவுக்கு வாக்களித்த மக்கள்தான் இன்று அவரை வீட்டுக்குப் போ என்று குரல் எழுப்புகின்றனர். மக்கள் வீதிக்கு வரும் நிலைமை உருவாகுமென அரசியல் தெரிந்த பலரும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னரே எதிர்பார்த்திருந்த ஒன்றுதான். ஆகவே ஊழல்மோசடி, அதிகாரத் துஸ்பிரயோகம் மாத்திரமல்ல பொருளாதார நெருக்கடிக்கான மூலத்தை இனிமேலாவது சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஏனெனில் கோட்டாபய மாத்திரமல்ல சிங்கள அரசியல்வாதிகள் பலரிடமும் ஊழல்மோசடிக் குற்றச்சாட்டுகள் உண்டு. ஆகவே இனரீதியாக வகுக்கப்பட்டு வரும் பொருளாதாரத் திட்டங்கள் பொருளாதார நெருக்கடிக்கு உரிய காரணம் என்பதை உணர வேண்டும்.

கேள்வி- அரசாங்கத்திற்கெதிரான சிங்கள மக்களின் போராட்டம் தொடர்பில் உங்களின் நிலைப்பாடு?

பதில்-பொருளாதார நெருக்கடி. விலைவாசி உயர்வுக்கு எதிரான சிங்கள மக்களின் போராட்டம் நியாயமானது. அந்தப் போராட்டத்தைத் தமிழ் மக்கள் ஆதரிப்பார்கள். ஏனெனில் முப்பது ஆண்டுகால போரும் அதன் பின்னரான 12 வருடங்களில் வடக்குக் கிழக்குத் தமிழர்கள் எதிர்கொண்ட இன்னல்கள் துயரங்கள் என்பது மிகப் பெரியது.

ஆகவே போராட்டம் ஒன்றை எப்படி எந்தச் சந்தர்ப்பத்தில் ஆதரிக்க வேண்டும் என்பது தொடர்பாகத் தமிழ் மக்களுக்கு யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டுமென்பதில்லை. ஆனால் கோட்டாபயவுக்கு எதிரான சிங்கள மக்களின் போராட்டத்தில் தமிழ் மக்கள் நேரடியாக ஆதரவு கொடுக்க வேண்டுமென யாருமே எதிர்ப்பார்க்கக்கூடாது.

ஏனெனில் டீசல், காஸ்,பெற்றோல் விலைகள் குறைவடைந்து அவை வழமைபோன்று இலகுவாகக் கிடைத்துவிட்டால், அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகள் குறைவடைந்து நிலைமை வழமைக்குத் திரும்பிவிட்டால், தற்போது வீதியில் நின்று போராடும் சிங்கள மக்கள் வீட்டுக்குச் சென்றுவிடுவார்கள். சிங்களவர்களுடைய பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும்.

ஆகவே கோட்டாபய ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமெனக் கோசமிட்டுப் போராடும் சிங்கள மக்கள் வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை முதலில் நன்கு அறிந்திருக்க வேண்டும். தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டம் எழுபது ஆண்டுகளுக்கும் மேலானது.

கேள்வி- தமிழ் தரப்புகளின் மௌனம், அரசாங்கத்திற்கு ஆதரவானதா?

பதில்-தமிழர்கள் மௌனமாக இருக்கவில்லை. பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வுகளினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் கோட்டாவை வீட்டுக்குப் போ என்று கோசமிடும் சிங்கள மக்கள், பொருளாதார நெருக்கடிக்கான மூல காரணத்தை அறிய விரும்புகின்றார்களா? கோட்டாபயவின் அதிகாரத் துஸ்பிரயோகம், ஊழல்மோசடி மாத்திரமே விலைவாசி உயர்வுக்கும் பொருளாதார நெருக்கடிக்கும் காரணமல்ல.

இனரீதியாக வகுக்கப்பட்ட அரசியல் பொருளாதாரத் திட்டங்கள் தற்போதைய நெருக்கடிக்குக் காரணம். இதனை வீதியில் நின்று போராடும் சிங்கள மக்கள் துணிவோடு வெளிப்படுத்த வேண்டும்?

முப்பது ஆண்டுகால போருக்குச் செலவிட்ட தொகை பற்றி எந்தவொரு அரசியல் கட்சிகளும் நாடாளுமன்றத்தில் விளக்கம் கோரவில்லை. 2009 இற்குப் பின்னரான சூழலில் வடக்குக் கிழக்கில் இராணுவ முகாம்கள் நவீனமயப்படுத்தும் திட்டங்கள் துரிதப்படுத்தப்பட்டமை சிங்களக் குடியேற்றங்கள். புத்தர் விகாரை அமைக்கப்பட்டமை புத்தர் சிலைகள் வைக்கப்படுகின்றமை போன்ற இனரீதியான திட்டங்களுக்குரிய நிதி எங்கிருந்து பெறப்பட்டன? இது பற்றி ஜே.வி.பிகூட நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பவேயில்லை.

ஆகவே கோட்டாவுக்கு எதிரான போராட்டத்தில் தமிழ் மக்கள் மௌனமாக இருப்பதாக யாருமே கூற முடியாது. தமிழ் மக்களுக்கு வலிகள் ஏராளம்.

கேள்வி- விமர்சனத்திற்குள்ளான  சுமந்திரனின் தீப்பந்தப் போராட்டம் தொடர்பில் உங்களின் நிலைப்பாடு?

பதில்-சுமந்திரன் எப்போதுமே தென்பகுதி அரசியலோடு ஒத்துப்போகக்கூடிய நிலைப்பாட்டை எடுத்து வரும் ஒருவர். ஆனாலும் சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் நடத்திய போராட்டத்தைக் கொச்சைப்படுத்த முடியாது. அவர் தனது கட்சி சார்ந்து தீப்பந்தப் போராட்டத்தை நடத்திச் சிங்கள மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். ஆனால் இந்தப் போராட்டத்தின்போது வடக்குக் கிழக்கு மக்களின் அரசியல். பொருளாதார நியாயப்பாடுகளை வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.

குறிப்பாகச் சிங்கள மக்கள் தற்போது எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகள், விலைவாசி உயர்வுகள் தமிழ் மக்களுக்குப் போர்க்காலத்தில் பரீட்சயமானவை என்று கூறியிருக்க வேண்டும். 1999களில் ஒரு லீற்றர் பெற்றோல் ஆயிரத்து 500 ரூபாவுக்கும் அதற்குக் கூடுதலான விலைகளுக்கும் வடக்குக் கிழக்கில் விற்பனை செய்யப்பட்டன.

2014 ஆம் ஆண்டுவரை யாழ்ப்பாணத்தில் எரிபொருட்களின் விலைகள் கொழும்பு விலையைவிடக் கூடுதலாகவே விற்பனை செய்யப்பட்டன. ஆகவே இந்த நிலைமைகள் பற்றி எடுத்துக் கூறியிருக்க வேண்டும்.

கேள்வி- மக்களிடம் ஆட்சியை ஒப்படைக்க கோரும் சிங்கள மக்களின் கோரிக்கை நியாயமானதா?

பதில்-இது நல்ல கேள்வி ஆட்சியைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு கோர மக்களுக்கு முழு உரிமையும் உண்டு. ஏனெனில் இலங்கை அரசு என்ற கட்டமைப்பு மக்களினாலேயே தோற்றுவிக்கப்பட்டது. ஆகவே ஆட்சியை தம்மிடம் ஒப்படைக்க வேண்டுமென மக்கள் கோருவதன் அர்த்தம் என்னவென்றால், இலங்கையின் தற்போதைய அரச கட்டமைப்பை மாற்ற வேண்டும் என்பதே.

ஆகவே தமிழ் முஸ்லிம் மக்களும் ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுப்பதற்குரிய புதிய அரச கட்டமைப்பை உருவாக்க சிங்கள மக்கள் ஒன்றுபட்டால், தமிழ் மக்கள் நிச்சயமாக முழுமையான ஆதரவு கொடுப்பார்கள்.

தமிழர்களின் அதிகாரப் பங்கீட்டுக்கான கோரிக்கை இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்பிருந்தே தோன்றியது. அதற்காக முப்பது வருட அகிம்சைப் போராட்டமும் அடுத்த முப்பது வருட ஆயுதப் போராட்டமும் நடத்தப்பட்டது. ஆனால் புவிசார் அரசியல் போட்டிக்குள் ஈழவிடுதலைப் போராட்டமும் இல்லாதொழிக்கப்பட்டது.

தற்போது கோட்டா வீட்டுக்குப் போ என்று போராடும் சிங்கள மக்கள் பொருளாதார நெருக்கடிக்கு இனரீதியான அரசியல், பொருளாதாரத் திட்டங்கள்தான் மூல காரணம் என்பதை உணர்ந்து, இலங்கை ஒற்றையாட்சி அரச கட்டமைப்பின் அதிகாரமுறைமைகளை மாற்ற முற்பட்டால் நிச்சயமாக இலங்கைத்தீவில் அரசியல் பொருளாதார மறுமலர்ச்சி ஏற்படும்.

கேள்வி- தமிழ் மக்கள் எந்த ஆர்வமுமின்றி இருக்கின்றார்கள்,அது அரசாங்கத்திற்கு ஆதரவானதா?

அரசாங்கத்திற்கு ஆதரவு என்பதல்ல. தமிழ் மக்களைப் பொறுத்தவரை கொழும்பில் எந்த அரசாங்கம் பதவியில் இருந்தாலும், ஒன்றுதான். காஸ். டீசல் கிடைத்துவிட்டால் சிங்கள மக்கள் போராட்டத்தை நிறுத்திவிடுவார்கள். ஆனால் தமிழர்களின் போராட்டம் தொடர்ச்சியானது. சிங்கள மக்கள் உண்மையைத் தெரிந்து கொண்டு முழுமையான அதிகாரப் பங்கீட்டு மாற்றத்துக்கு ஒன்றுதிரள வேண்டும்.

சிங்கள அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் மாறி மாறி ஆட்சியமைத்தபோது போரைத் தொடர்ச்சியாக முன்னெடுத்தன. அதற்காகச் சிங்கள மக்களுக்கு இனவாத கருத்துக்களையும் தேர்தல் காலங்களில் விதைத்தார்கள். அது பிழையான பாதை என்பதைத்தான் தற்போதைய பொருளாதார நெருக்கடியும், விலைவாசி உயர்வும் சிங்கள மக்களுக்கு உணர்த்தி நிற்க்கின்றன.

கேள்வி- அரசு மற்றும் அமைச்சரவை மாற்றம் தொடர்பில் தமிழ் கட்சிகளின் நிலைப்பாடு?

பதில்-நிலையான அரசியல் தீர்வு முன்வைக்கப்படாதவரை தமிழ் மக்கள் எந்தவொரு அரசாங்கத்தையும் அதன் அமைச்சரவைiயும் ஏற்க மாட்டார்கள். வெறுமனே அரசியல் நோக்கிலான அபிவிருத்தி வேலைத் திட்டங்களே வடக்குக் கிழக்கில் முன்னெடுக்கப்படுகின்றன.

தமிழ் மக்களுக்கு எது சரி எது பிழையென எல்லாமே விளங்குகின்றது. ராஜபக்சவின் அரசாங்கம் இனவாதத்தை மூலதனமாக்கிப் பிழையான வழியில் ஆட்சி அமைத்துள்ளது என்பதைத் தற்போதுதான் சிங்கள மக்களும் உணருகின்றனர்.

ஆகவே தற்போதைய நெருக்கடியான சூழலில், தமது அதிகாரத்தைத் தொடந்தும் தக்கவைப்பதற்காகச் செய்யப்பட்டுள்ள அமைச்சரவை மாற்றத்தால் ஒட்டுமொத்த இலங்கைத்தீவுக்கே பயனில்லை என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.