மர்ஹூம் வை.எம்.ஹனிபாவின் பெயரை வீதிக்கு சூட்டத் தீர்மானம்

(அஸ்லம் எஸ்.மௌலானா)

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவராகப் பணியாற்றி, தனியான நகர சபைக்கான போராட்டம் உட்பட ஊர் நலன்சார் விடயங்களில் அர்ப்பணிப்புடன் முன்னின்று உழைத்த மர்ஹூம் அல்ஹாஜ் வை.எம்.ஹனிபா அவர்களின் பெயரை சாய்ந்தமருதிலுள்ள வீதியொன்றுக்கு சூட்ட கல்முனை மாநகர சபை தீர்மானித்துள்ளது.

கல்முனை மாநகர சபையின் 49ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை (26) மாலை, மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் தலைமையில் இடம்பெற்றபோது மாநகர சபையின் சாய்ந்தமருது சுயேட்சைக்குழு உறுப்பினர் எம்.எஸ்.அப்துல் றபீக் அவர்கள் இதற்கான பிரேரணையை சமர்ப்பித்திருந்தார்.

இதன்படி, சாய்ந்தமருது-16 ஆம் பிரிவில் அமைந்துள்ள வீ.எச்.வீதியில் தொடங்கி தாமரை வீதி வரை செல்லும் பாதைக்கு வை.எம்.ஹனிபா வீதி என்று பெயர் சூட்டத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

குறித்த இவ்வீதிக்கு இதுவரை எவ்வித பெயரும் இல்லாதிருப்பதாகவும் இவ்வீதியிலேயே மர்ஹூம் வை.எம்.ஹனிபா அவர்கள் வாழ்ந்த வீடு அமைந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டிய மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.அப்துல் றபீக், இப்பகுதி வாழ் மக்கள் இவ்வீதிக்கு அன்னாரது பெயரை சூட்டுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர் எனவும் இதனை எமது மாநகர சபை அங்கீகரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதையடுத்து இப்பெயர் சூட்டும் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

அத்துடன் சாய்ந்தமருது-15 மற்றும் 17ஆம் பிரிவுகளில் அமைந்துள்ள சனசமூக நிலைய வீதி எனவும் சிலோன் வீதி எனவும் இரு பெயர்களால் அழைக்கப்பட்டு வருகின்ற பாதைக்கு ஜாமிஉல் இஸ்லாஹ் ஜும்ஆ பள்ளிவாசல் வீதி என பெயர் மாற்றம் செய்வது என தீர்மானிக்கப்பட்டது. இதற்கான பிரேரணையையும் மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.அப்துல் றபீக் கொண்டு வந்திருந்தார்.


Aslam S.Moulana

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.