அண்ணனின் ஆட்சியிலும் நீதி இல்லை, தம்பியின் ஆட்சியிலும் நீதியை எதிர்பார்க்க முடியாது… (பாராளுமன்ற உறுப்பினர் – கோ.கருணாகரம் ஜனா)

(சுமன்)

அண்ணனின் ஆட்சியிலும் நீதி இல்லை, தம்பியின் ஆட்சியிலும் நீதியை எதிர்பார்க்க முடியாது. நீதி இல்லாத நாட்டில் தற்போது நிதியும் இல்லை. ஆனால், இல்லாத நீதிக்கும், நிதிக்கும் ஒரு அமைச்சர் மட்டும் இருக்கின்றார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.

இன்றைய தினம் மட்டக்களப்பில் இடம்பெற்ற படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் அவர்களின் 17வது ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உண்மையில் சிவராம் என்பவர் சிரோஸ்ட ஊடகவியலாளர் என்பதைத் தாண்டி அவர் ஒரு சிறந்த அரசியற் போராளியாக இருந்தார். என்னுடைய காலத்திலே என்னுடன் மிகவும் நெருங்கிப் பழகியவர் மாத்திரமல்லாமல் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளராகவு இருந்தார். நான் அப்போது தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளராக இருந்தேன். மிகவும் நெருக்கமானவராக அவர் இருந்தார். அவரது அறிவு, ஆற்றல் அனைத்தையும் நன்கறிந்தவன். இன்று அவர் படுகொலை செய்யப்பட்டு 17 வருடங்கள் கடந்திருக்கின்றன.

இலங்கையின் இராணுவ நுணுக்கங்களை தி ஐலன்ட் பத்திரிகையில் தராகி என்ற புனைபெயரில் கட்டுரை எழுதி இலங்கையில் நடந்த இராணுவ அடக்கு முறைகளைக் கூட வெளியுலகிற்குக் கொண்டுவந்தவர். இறுதியில் தமிழ்த் தேசியத்தின் பால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதில் பாடுபட்ட ஒரு மகானை இழந்து அவரது நினைவை நாங்கள் நினைiவு கூருகின்றோம்.

குறிப்பாக மஹிந்த ராஜபக்ச ஆட்சியிலே சுமார் 42க்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும், அதில் 39 பேர் தமிழ் ஊடகவியலாளர்கவும் இருக்கின்றார்கள். அந்தவகையில், இந்த ஊடகவியலாளர்களுக்கு இதுவரை எந்த நீதியும் கிடைக்கவில்லை. இந்த நாட்டிலே இந்த அரசு காலகட்டத்திலே நீதியை நாங்கள் எதிர்பார்க்க முடியாது. மஹிந்தவின் ஆட்சியிலும் நீதியை எதிர்பார்க்க முடியாது, அவரது தம்பி கோட்டபாயவின் ஆட்சியிலும் நாங்கள் நீதியை எதிர்பார்க்க முடியாது.

நீதி இல்லாத நாட்டில் தற்போது நிதி கூட இல்லாமல் இருக்கின்றது. நீதியும் இல்லை. நிதியும் இல்லை. ஆனால், இல்லாத நீதிக்கும், நிதிக்கும் ஒரு அமைச்சர் மட்டும் இருக்கின்றார். அந்த அமைச்சர் இன்னும் ஒரு மாதத்திலே இந்த நாட்டிலே நிலவியுள்ள பொருளாதாரப் பிரச்சனைக்குத் தீர்வு வரும் என நேற்றைக்கு முன்தினம் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்திலே உறுதியளித்துள்ளார். எந்தவொரு சிறுபிள்ளையும் இவரின் இந்தக் கருத்தை நம்பாது.

இதேபோன்ற தான் இந்த அரசு நாட்டு மக்களையும், சர்வதேசத்தையும் ஏமாற்றிக் கொண்டு வருகின்றது. பொருளாதார ரீதியில் மாத்திரமல்லாமல், ஆயுதப் போராட்ட முடிவில் சர்வதேசத்திற்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விட்ட காரணத்தினால் இந்த ராஜபக்ச சகோதர்கள் அரசை உலகத்தில் எவருமே நம்ப முடியாது நிலை ஏற்பட்டுள்ளது.

உலகத்திலே மிகவும் பிரபல்யமாக வந்த அரச தலைவராகவும், மிகவும் கீழ்த்தரமாக விமர்சிக்கப்படும் தலைவராகவும் கோட்டபாய ராஜபக்ச திகழ்கின்றார். இவர் ஒரு போர்க்குற்றவாளி. இவரை தமிழ் மக்கள் 2019ம் ஆண்டே வேண்டாமென்று நிராகரித்திருந்தார்கள். இன்று அவரை வேண்டுமென்று கொண்டு வந்தவர்களே வேண்டாம் என்று கூறுகின்றார்கள்.

எனவே இவர் உள்ளிட்டவர்கள் பதவி விலக வேண்டும். இந்த நாடு ஒரு முன்னேற்ற நிலைக்குச் செல்ல வேண்டும். படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டும் என்பதே எங்களது உறுதியான நிலைப்பாடாகும் என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.