இராஜாங்க  அமைச்சர் வியாழேந்திரனின் பெயருக்கும், அவரது   பதவிக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தி,  உயிர் அச்சுறுத்தல் ஏற்படுத்தியவர்களுக்கு  எதிராக சட்ட நடவடிக்கை!!

கடந்த 25 ஆம் திகதி  இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாக  பிள்ளையாரடி பிரதான வீதி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட  ஆர்ப்பாட்டத்தின் போது  இராஜாங்க  அமைச்சரின் பெயருக்கும், அவரது அமைச்சு  பதவிக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் வார்த்தை பிரயோகங்களை  உபயோகிக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதுமட்டுமல்லாமல் அவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்தவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக இன்று (29) திகதி மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துவிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இளைஞர் மற்றும் விளையாட்டுதுறை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் இதன்போது மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த  2021 ஆம் ஆண்டு  ஜூன் மாதம் இராஜாங்க அமைச்சர்  எஸ். வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாக  இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் அமைச்சரை தொடர்பு படுத்தி   உண்மைக்கு புறம்பான செய்திகளை கூறி,  அமைச்சர் வகித்து வரும்  அமைச்சு பதவி குறித்து பதாகைகள் மூலம் காட்சி படுத்தி ஆர்ப்பாட்டம்  முன்னெடுக்கப்பட்டமை மட்டுமல்லாது  இராஜாங்க அமைச்சரின்  உயிருக்கு  அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமையினால் தனக்கு  உள ரீதியான  பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதாகவும்,
அதுமட்டுமல்லாது நீதி மன்றத்தில் ஒரு வழக்கு இடம்பெறும்போது உண்மைக்குப் புறம்பான விடயங்களை இவர்கள் திரிவுபடுத்தி வெளியிட்டு வருவதனால் இவர்களுக்கு எதிரான சகல ஆதாரங்களையும் வழக்கு தொடர்வதற்காக எழுத்து மூல ஆவணங்களாக மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும் சம்மந்தப்பட்ட ஒவ்வொருவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர்  எஸ்.வியாழேந்திரன் இதன்போது தெரிவித்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.