புதிய அமைச்சரவை 20 அமைச்சர்களுடன் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக தகவல்?

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அமைச்சரவையில் அங்கம் வகிப்பதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சுயாதீனமாக செயற்பட்டுவரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
இதற்கமைய புதிய அமைச்சரவையில் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே இடம்பெறவுள்ளனர்.
மேலும், ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய அரசாங்கத்துக்கு முழு ஆதரவை வழங்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற குழு உறுதியளித்துள்ளது.
இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தீர்மானித்துள்ளது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புதிய அமைச்சரவை 20 அமைச்சர்களுடன் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதற்கு மேலதிகமாக அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்களைக் கொண்ட அமைச்சுக்களுக்கு மாத்திரம் பிரதியமைச்சர்களை நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அதேவேளை இராஜாங்க அமைச்சர்களை நியமிப்பதா இல்லையா என்பது தொடர்பில் பேச்சு நடத்தப்பட்டு வரும் நிலையில் அதற்கான இறுதித் தீர்மானம் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன்.
அடுத்த வாரம் நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில் அதற்கு முன்னர் அமைச்சரவை நியமிக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாகவும், அமைச்சர்களுக்கான விடயங்களை ஒழுங்குபடுத்துவதற்கு இரண்டு வாரங்கள் தேவைப்படும் எனவும் அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, பிரதி சபாநாயகர் பதவிக்கு, பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வாய்ப்பு வழங்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அனைத்து கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் இந்த நியமனம் இடம்பெற வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
எதிர்வரும் 17ஆம் திகதி நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னர் இது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.